உறுதியான முடிவு கிடைக்கும் வரை; போராட்ட களத்தை விட்டு நகர மாட்டோம் – வேலையில்லா பட்டதாரி மாணவர்களின் உள்ளக் குமுறல்

துறையூர் தாஸன் )

அம்பாரை மாவட்ட வேலையில்லா பட்டதாரி மாணவர்களின் காலவரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்றுடன் 36 ஆவது நாளாகவும் தொடர்ந்தது.போராட்டத்தின் போது பட்டதாரி மாணவர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் கருத்து தெரிவித்த போது, இளைஞர்களை கட்டியெழுப்புவோம் இளைஞர்கள் தான் நாட்டினுடைய எதிர்கால தலைவர்கள் என்று சொல்கிறார்கள்.இப்பவே பட்டதாரிகளாகிய, எங்கள் எல்லோருடைய மனதிலேயும் இப்படிப்பட்ட விரக்தியான நிலையினை விதைப்பார்கள் என்று சொன்னால் ,வளர்ந்து வரும் காலங்களில் நாங்கள் எப்படிப்பட்டவர்களாக மாறுவோம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும் என உருக்கமாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நல்லாட்சி அரசாங்கம், நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொழுது பல திட்ட வரைபுகள் இருப்பதாகவும் நூறு நாள் திட்டங்கள் இருப்பதாகவும் கூறினாலும் பட்டதாரிகள் தொடர்பாக எந்தவிதமான திட்ட வரைபும் இல்லை என்பது நிருபனமாகியிருக்கிறது.அதே போல எந்த விடயத்திலும் அவர்களுக்கு திட்ட
வரைபு இல்லை, வெறுமையாக கால இழுத்தடிப்பையும் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளையும் மற்றும் வார்த்தைகளையும் பேசிக்கொண்டு அரசும்
அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றிக்கொண்டு தாங்களும் சொகுசாக வாழ்ந்து கொண்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்தும், ஆடம்பரமான நிகழ்வுகளுக்குச் சென்று கைகொட்டி அதை ரசிப்பவர்களாக மாத்திரமே இருக்கிறார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசியல் தலைவர்கள் அதை மறந்து மமதையில், மக்களுடைய நிலைமைகளைப் பார்க்காது தங்களது குடும்பங்கள் வாழ்வதற்காக சுயநலவாதப் போக்கிலே இருப்பது மிகவும் ஒரு விரக்தியை எங்கள் மத்தியில் உண்டாக்கிக்கொண்டு இருக்கின்றது.
தொடர்ச்சியாக இரவு பகல் பாராது எங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருப்போம்.ஒரு சில பொய்யான வாக்குறுதிகள் கிடைத்தாலும் அதை நாங்கள் நம்புவதற்கோ நம்பி ஏமாறுவதற்கோ நாங்கள் கோழைகள் அல்ல.எங்களுக்கு சரியான உறுதியான முடிவு கிடைக்கும் வரைக்கும் இவ்விடத்தை விட்டு நாங்கள் நகர்வதாகவும் போராட்டத்தை எவர் வந்தாலும் கைவிடுவதாகவும் இல்லை.

நான்கு வருட படிப்பை, பல்கலைக்கழக மற்றும் அரசாங்க நிர்வாக இன்னல்களுக்கு மத்தியில் ஒரு வருட காலத்தை வீணாக வீணடித்து ஐந்து வருடங்களாக கற்று, படிக்கும் காலங்களில் எங்களுக்குத் தேவையான முழு பயிற்சிகளையும் பெற்று அதன் பிற்பாடு சுயமாக தொழில் செய்தும் சில நிறுவனங்களிலே வேலை செய்தும் பல பயிற்சிகளையும் அனுபவங்களையும் பெற்று இருக்கின்ற எங்களைப் பார்த்து மீண்டும் எங்களுக்கு பயிற்சி வழங்கப் போவதாக கூறுகிறார்கள்.இது பல்கலைக்கழகங்களை அவமானப்படுத்துகின்ற கேலிக்குள்ளாக்குகின்ற ஒரு கருத்தாகத் தான் இருக்கின்றது.
அதாவது அரசியல் வாதிகள் சுயமான சொந்த பகுத்தறிவு இல்லாத ஒரு கருத்தை எங்கள் மத்தியில் முன்வைத்ததை அவதானித்தோம்,அது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது சிந்தித்து பாருங்கள் தரம் 01 தொடக்கம் பல்கலைக்கழக கற்கை வரை பல்வேறு பரீட்சைகளை தடை தாண்டி எத்தனையோ பல விதமான பயிற்சிகளை பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் பெற்றுக்கொண்டு முப்பது வயதை கடந்த நிலையில், எங்களை படிப்பித்த எங்களது
பெற்றோருக்கு உழைத்துக்கொடுக்காமல் இப்பொழுது நாங்கள் குடும்பமாகி பிள்ளைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்திலே,மீண்டும் எங்களுக்கு ஆறு
மாதம் பயிற்சி தருவதாக கூறி மீளவும் இழுத்தடிப்புக்குள் தள்ளிவிட திட்டமிடுவதைநாங்கள் அவதானிக்கிறோம்.
விசேடமாக நாட்டினுடைய அதிமேதகு ஜனாதிபதி அவர்களை கேட்டுக்கொள்கிறோம்,எங்களுக்கு ஏனையோருடைய எந்தக் கதைகளும் தேவையில்லை.ஜனாதிபதி அவர்கள் நேர்மையானவர்,எளிமையானவர் எல்லாவற்றுக்கும் மத்தியில் சிறுபான்மையினர் உள்ளங்களை நன்கறிந்தவர் என்று சொல்லி நாங்கள்இதுவரைக்கும்நம்பி வந்தோம்.அந்த வார்த்தைகள் பொய்யென்பதைப் போல எங்களுக்குத் தென்படுகின்றது.
இதுவரைக்கும் பட்டதாரிகள் தொடர்பாக எந்தவிதமான கருத்தையும் எங்களுடைய நாட்டின் ஜனாதிபதி அவர்கள் பேசாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.

எனவே இந்த நாட்டினுடைய ஜனாதிபதி அவர்கள் எங்களுடைய பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை முன் வைக்க வேண்டும் என்று சொல்லி கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். எனவே தயவு செய்து எங்களுடைய விரக்தி நிலை இன்னும் முற்றுவதற்கு இடம் கொடுக்காத படிக்கு,உடனடியாக எங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு எங்களுடைய நாட்டின் ஜனாதிபதி அவர்களிடத்தே பட்டதாரிகள் சார்பாக வேண்டிக்கொள்கிறோம் – என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!