பாதுகாப்புத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் தோன்றியுள்ள அசாதாரண நிலை தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (06) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சிங்கள சகோதரர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவெறுப்பு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறப்போவதை உளவுத்துறை முன்கூட்டியே அறிந்து, அதனை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
இங்கு தெரிவித்த பெளத்த மதகுருமார்கள், முஸ்லிம்கள் மீதுள்ள தப்பிப்பிராயங்களை களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். முஸ்லிம்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக வெளியில் பல சிங்கள குழுக்கள் இயங்குகின்றன. அவ்வாறானவர்களே வெளியிலிருந்து வந்து இந்த வன்முறைகளில் ஈடுபட்டனர் என்பதை சுட்டிக்காட்டினார்கள்.
இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, பைசர் முஸ்தபா, லக்ஷ்மன் கிரியெல்ல, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தெளபீக், லக்கி ஜயவர்தன, இராணுவ உயரதிகாரிகள், பெளத்த மதகுருமார்கள், கண்டியிலுள்ள முக்கியமான மெளலவிமார், கிறிஸ்தவ மதகுருமார், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!