திகன பிரதேசத்தில் மீண்டும் அட்டகாசம்…

முஸ்லிம்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பிரதமருக்கு அழுத்தம்..

கண்டி, திகன பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நடாத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

பிரேத ஊர்வலத்தில் செல்வோர் திகன, உடுதும்பர பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வியாபார நிலையங்களை தகர்த்து வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் தெரிவித்தார்.

பூதவுடலை சுமந்துகொண்டு கண்டி, திகன நகரத்துக்குக்குள் ஊர்வலமாக செல்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையிலும் அதனை மீறி இந்தக் காட்டு மிராண்டித்தனங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அந்தப் பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் விஷேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போதும், அவர்களின் கண்ணீர் புகையையும் மீறி, இறந்தவரின் பூதவுடலை சுமந்து ஊர்வலமாக செல்பவர்களே இந்த அட்டகாசத்தை புரிந்து வருவதாகவும், அந்தப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள் மீதும் கற்கள் எறியப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

திகன டவுன், பல்லேகல, கொனவல மக்கள் உயிரை கையில் ஏந்திக்கொண்டு வீடுகளில் அடைந்து கிடப்பதாகவும், முஸ்லிம்கள் பலர் தாக்கிக் காயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.

சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்படுமெனக் கூறிக் கொண்டிராமல் அவசரமாக மேலதிக பொலிஸாரை அனுப்பி முஸ்லிம்களின் சொத்துகளையும், உயிர்களையும் பாதுகாக்குமாறும், இந்த அராஜகச் செயல்கள் ஏனைய இடங்களில் பரவாமல் இருக்க    நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அரசாங்கத்தை மீண்டும் கோரியுள்ளார்.

இதேவேளை, பொலிஸ்மா அதிபர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோரிடமும் அமைச்சர் இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்து, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினார்.

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!