அம்பாறை சம்பவம் இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குழைக்கும் சதி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் கண்டனம்

அம்பாறை நகர் அசம்பாவிதத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும், நிலைமையை சுமுகமாக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைப்பின் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று அதிகாலை அம்பாறை நகரில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அம்பாறையில் இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. நாட்டிலுள்ள இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குழைக்கும் ஒரு அம்சமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

முஸ்லிம்களை ஆத்திரமூட்டச் செய்யும் இதுபோன்ற நடவடிக்கைகளின் போது முஸ்லிம்கள் மிகவும் விவேகத்துடனும், பொறுமையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என வினயமாக கேட்டுக் கொள்கின்றோம். அப்பிரதேசத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் தலைமைகள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன. மக்கள் அமைதியாகவும் நிதானத்துடனும் நடந்துகொள்ளுமாறும், நாட்டில் இதற்கு முன்னர் ஏற்பட்ட சம்பவங்களை அனுபவங்களாக கொள்ளுமாறும் நாம் முஸ்லிம்களை மிகவும் விநயமாக கேட்டுக் கொள்கின்றோம் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் டெய்லி சிலோனிடம் தெரிவித்தார்.

அம்பாறை நகரில் இன்று(27) அதிகாலை இடம்பெற்ற கைகலப்பில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும், கடைகள் சிலவும் தாக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் உணவகம் ஒன்றுக்கு உணவருந்த வருகைதந்த பெரும்பான்மை இளைஞர்கள் சிலர் உணவாக உரிமையாளருடன் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து உணவகத்துக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் தொலைபேசி அழைப்பின் மூலம் இரு வாகனங்களுக்கு வெளிப் பிரதேசத்திலிருந்து ஆட்களை வரவழைத்தே இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஹோட்டல் தவிர்ந்த மற்றொரு வர்த்தக நிலையத்திற்கும் தீவைத்துவிட்டு, பள்ளிவாசலுக்கும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் பள்ளிவாயலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவம் கூறப்படுகின்றது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!