பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் ஒன்றை தொலைத்த மாணவியொருவர் அதனை எவ்வாறு பெறுவது

பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் ஒன்றை தொலைத்த மாணவியொருவர் அதனை எவ்வாறு பெறுவது என்பது பற்றி என்னிடம் கேட்டு இருந்தார். உடனடியாக பதில் அளிக்க முடியாமல் யாரிடமாவது கேட்டு சொல்வதாக உறுதியளித்தேன். எனினும் மறந்துவிட்டேன். நேற்று அலுவலகத்திற்கு சென்ற போது மீண்டும் அந்த மாணவியின் அழைப்பு; கொஞ்சம் பொறுக்கச் சொல்லிவிட்டு, அலுவலகத்தில் எனது மேசையில் இருந்த கணனியில், பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தை நாடினேன். வழி கிடைத்தது. பிள்ளையின் சுட்டிலக்கத்தைப் பெற்று உடனடியாகவே எனது கடன் அட்டையைப் பயன்படுத்தி பெறுபேற்று சான்றிதழுக்கு விண்ணப்பித்து முடித்தேன். அச்சந்தர்ப்பத்தில் பரீட்சைத் திணைக்களத்தின் சில மெச்சத்தக்க செயன்முறைகளைப் பற்றி, நான் எனது சக அலுவலக நண்பர்களுக்கும் தெரிவித்திருந்தேன்.

இலங்கை பரீட்சைத் திணைக்களம் தற்போது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர் க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) பரீட்சைக்கு தோற்றியோரின் பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது.

https://certificate.doenets.lk/ என்ற இணைப்பினூடாக சென்று தரவுகளை பூரணப்படுத்தலாம்.
ஒரு பிரதிக்கு ரூபா 600.00 + தபால் செலவு ரூபா 100.00+ சேவை வரி ரூபா 12.50 ஆக மொத்தம் ரூபா 712.50 உடன் வேலை முடியும்.
கட்டணத்தை கடனட்டையை அல்லது அஞ்சல் அலுவகத்தில் செலுத்திய பற்றுச்சீட்டு இலக்கத்தை பயன்படுத்தி செலுத்த முடியும்.

காலை 9.30 மணியளவில் விண்ணப்பித்த 20 நிமிடத்தில் உங்கள் சான்றிதழ் பிரதியெடுக்கப்பட்டுவிட்டதாகவும், தொடரும் 20 நிமிடத்தில் தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது மட்டுமல்லாமல் இன்று காலையில் சான்றிதழ் கையில் கிடைத்தும் விட்டது.

உண்மையிலேயே தொழினுட்ப வளர்ச்சியை சிறப்பாக கையாளும் பரீட்சைத் திணைக்களத்தின் பணி பாராட்டப்பட வேண்டியதுடன், தொலைவில் இருந்து வருவோருக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாகும்.

அலைச்சல், பிரயாணச் செலவு, மொழி தெரியாமை போன்ற பிரச்சனைகளின்றி உங்கள் பரீட்சை சான்றிதழை நீங்களும் பெற்றிட கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்…

https://certificate.doenets.lk/

நன்றி – Lanka_Media

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!