ஞாயிறு நள்ளிரவுடன்நிறைவு

தேர்தலுக்கான பிரசார கூட்டங்கள் ஆகஸ்ட் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதோடு அமைதி காலம் ஆரம்பமாகிறது.

எனவே அமைதி காலத்தில் சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று  இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கடந்த 26 ஆம் திகதி கட்சி செயலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆகஸ்ட் 03 ஆம் திகதியும் பிரசாரங்களை நடத்துவதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட போதிலும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு 02 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசாரங்களை முன்னெடுக்க தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே 02 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசார கூட்டங்களை நடத்துதல், கிராமங்களிலும் வீடுகளிலும் கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் சென்று வாக்குகளை கேட்டல், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், அறிவித்தல் கொடுக்கப்பட்ட கிளை அலுவலகங்களில் பிரசார பலகைகளை காட்சிப்படுத்தியிருத்தல் மற்றும் சுவரொட்டிகளையும் அறிவித்தல்களையும் பதாதைகளையும் காட்சிப்படுத்தல் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர் ஆரம்பமாகும் அமைதி காலப்பகுதியினுள் அனைத்து அரசியல் கட்சிகள்,குழுக்கள், வேட்பாளர்கள் இவற்றை தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு முடிந்தளவு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!