பொதுஜன பெரமுன – முஸ்லிம் கவுன்ஸீல் ஒப் ஸ்ரீ லங்கா கடிதம் தொடர்பான விளக்கம்

தேர்தலுக்குப் பின்பு சில பிரதேசங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கு முஸ்லிம் கவுன்ஸீல் ஒப் ஸ்ரீ லங்கா அனுப்பிவைத்த கடிதம் தொடர்பாக தவறான கருத்தொன்று பரப்பட்டு வருவது குறித்து பின்வரும் விளக்கத்தை அளிக்கின்றோம்.

உகுரஸ்பிடி, வியங்கல்லை ஆகிய இடங்களில் முஸ்லிம்களை இலக்குவைத்த நடைபெற்ற சம்பவங்கள் குறித்து எமக்கு தெரிவிக்கப்பட்டதும், அது தொடர்பாக பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைத் தொடர்புகொண்டு அவர்களின் கவனத்துக்கு கொண்டுவ்தோம். அதேநேரம் இதுதொடர்பாக பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவின் தலைவர் நகீப் மௌலானாவின் கவனத்துக்கும் கொண்டுவந்தோம். நகீப் மௌலானா பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் கவனத்திற்கு இதனைக் கொண்டுவந்துள்ளார்.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிற்கு இந்த சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை குறிப்பிட்டு கடிதமொன்றை அனுப்பிவைக்குமாறு அவர் கேட்டதோடு பேராசிரியர் பீரிஸின் மின்னஞ்சல் முகவரியையும் அனுப்பிவைத்திருந்தார். அதன்படியே நாம் பேராசிரியர் அவர்களுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்தோம். நாம் இக்கடிதத்தை ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கவில்லை.
இதேநேரம், பெசில் ராஜபக்ஷ அவர்கள் உடனடியாக செயற்பட்டு, சம்பவம் இடம்பெற்றிருப்பது வெயங்கொடை என கருதி அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனதுங்கவிடம் இதற்கு நடவடிக்கையெடுக்கும்படி அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனதுங்க என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது தொகுதியில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம் செய்ததாகவும் அங்கு அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் உறுதிப்படுத்தினார். சம்பவம் நடைபெற்றிருப்பது வியங்கொடையில் அன்றி வியங்கல்லையில் என்று நான் தெரிவித்தேன்.
நாம் அனுப்பிவைத்த கடிதத்தை சிலர் தமது அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு பயன்படுத்தி வருவதை காணக்கூடியதாக உள்ளது. முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா அரசியல் சார்பற்ற, சமூக நலன்களை மாத்திரமே இலக்காக கொண்டு செயற்பட்டுவரும் சமூக அமைப்பாகும். எமது கடிதத்தை விமர்சித்த பலர் நாம் அரசியல் நோக்கத்தில் செயற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் எவரும் இந்த இரு சம்பவங்கள் பற்றியும் எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை. தேர்தலுக்குப் பின் நடைபெற்ற இந்த சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே நாம் பொதுஜன பெரமுனவின் தலைவர்களோடு பேசினோம். அவர்கள் இதனை சாதகமான முறையில் அணுகினார்கள். அதற்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது கடிதத்தில் நாம் கேட்டது, பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஓரளவேணும் முஸ்லிம்களும் பங்களிப்பு செய்திருப்பதனால், அதுபற்றி விளக்கி ஓர் அறிக்கையை விடுக்குமாரே. அதன்மூலம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயங்கள் குறையும் என்ற நோக்கத்திலாகும். சிலர் இதற்கு அரசியல் சாயம்பூச முற்படுகின்றனர். எம்மைப் பொருத்தவரை, நாம் கடந்த காலங்களில் சமூகத்திற்கு நடக்கும் அநீதிகளை எந்த அரசு செய்தாலும், அதனைச் சுட்டிக்காட்ட தவறியதில்லை என்பதை முஸ்லிம் சமூகம் நன்கு அறியும்.
என்.எம்.அமீன்
தலைவர்
முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!