185 ஆசனங்களை கைப்பற்றியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் 13 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. எனினும், புதிய தேர்தல் முறையினால் சபைகளில் தனித்து ஆட்‌சியமைப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. குறித்த சபைகளில் கூட்டாட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திலும், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலை சின்னத்திலும், சுயேட்சைக்குழுவிலும் போட்டியிட்டு இந்த ஆசனங்களை வென்றுள்ளது. இதுதவிர, இன்னும் சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரம் பட்டியல் ஊடாக மேலதிக சில ஆசனங்கள் கிடைக்கப்பெறவுள்ளது. இதனால் ஆசனங்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

 

மாவட்ட ரீதியில் அம்பாறையில் 59 ஆசனங்களையும், திருகோணமலையில் 27 ஆசனங்களையும், மட்டக்களப்பில் 24 ஆசனங்களையும், புத்தளத்தில் 17 ஆசனங்களையும், கண்டியில் 12 ஆசனங்களையும், மன்னாரில் 8 ஆசனங்களையும், குருநாகலில் 7 ஆசனங்களையும், அநுராதபுரத்தில் 5 ஆசனங்களையும், களுத்துறையில் 4 ஆசனங்களையும், மாத்தளையில் 4 ஆசனங்களையும், பதுளையில் 3 ஆசனங்களையும், கொழும்பில் 3 ஆசனங்களையும், கம்பஹாவில் 2 ஆசனங்களையும், காலியில் 2 ஆசனங்களையும், பொலன்னறுவை, மாத்தறை, கேகாலை, வவுனியா, முல்லைத்தீவு, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசனங்கள் வீதம் 6 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

 

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரசபையில் 12 ஆசனங்களும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 8 ஆசனங்களும், சம்மாந்துறை பிரதேச சபையில் 8 ஆசனங்களும், பொத்துவில் பிரதேச சபையில் 6 ஆசனங்களும், நிந்தவூர் பிரதேச சபையில் 6 ஆசனங்களும், இறக்காமம் பிரதேச சபையில் 5 ஆசனங்களும், அக்கரைப்பற்று மாநகர சபையில் 4 ஆசனங்களும், தெஹியத்தகண்டிய பிரதேச சபை, அக்கரைப்பற்று பிரதே சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை ஆகியவற்றில் தலா 2 ஆசனங்கள் வீதமும், பதியத்தலாவ பிரதேச சபை மற்றும் அம்பாறை நகரசபை ஆகியவற்றில் தலா ஒரு ஆசனம் வீதம் 59 ஆசனங்கள் வெல்லப்பட்டுள்ளன.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேச சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 5 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 4 ஆசனங்களும் வெல்லப்பட்டுள்ளன. ஓட்டமாவடி பிரதேச சபையில் சுயேட்சைக்குழு சார்பாக 8 ஆசனங்களும், காத்தான்குடி நகர சபையில் 3 ஆசனங்களும், வாழைச்சேனை பிரதேச சபையில் 3 ஆசனங்களும், மண்முனைப்பற்று பிரதேச சபையில் ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பில் மொத்தமாக 23 ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

திருகோணமலை மாவட்டத்தில் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு 27 ஆசனங்கள் பெறப்பட்டுள்ளன. கிண்ணியா பிரதேச சபையில் 7 ஆசனங்களும், மூதூர் பிரதேச சபையில் 7 ஆசனங்களும், குச்சவெளி பிரதேச சபையில் 4 ஆசனங்களும், கிண்ணியா நகர சபையில் 4 ஆசனங்களும், தம்பலகாமம் பிரதேச சபையில் 3 ஆசனங்களும், திருகோணமலை நகரசபையில் 1 ஆசனமும், திருகோணமலை நகர பிரதேச சபையில் 1 ஆசனமும் கைப்பற்றப்பட்டள்ளன.

 

புத்தளம் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு புத்தளம் நகர சபையில் 7 ஆசனங்களும், கல்பிட்டி பிரதேச சபையில் 4 ஆசனங்களும், புத்தளம் பிரதேச சபையில் 3 ஆசனங்களும், வண்ணாத்தவில்லு பிரதேச சபையில் 2 ஆசனங்களும், நாத்தாண்டிய பிரதேச சபையில் ஒரு ஆசனம் என மொத்தமாக 17 ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

சபைகளில் கூட்டாட்சி அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் இதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!