மலையக மக்களின் மங்காத நட்சத்திரம் ஆறுமுகம் தொண்டமான்! – இரங்கல் செய்தியில் முன்னாள் எம்.பி. பேராசிரியர். இஸ்மாயில்

ஆறுமுகம் தொண்டமானின் மரணச் செய்தி பெரும் கவலையை விதைத்துள்ளதுடன், மலையகத்தின் அரசியல் ஆணி வேர் சரிந்து நிற்கின்ற துயரம் பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு குறித்து வழங்கியுள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மலையக மக்கள் பற்றி சிந்தித்து அவர்கள் குறித்தான சேவைகளுக்கு அர்த்தம் கொடுத்த ஆளுமையென்றால் அது ஆறுமுகம் தான். அவர் தனது பரம்பரை அரசியலில் விதை போட்டவர். மலையக மக்களின் பல உரிமைப் போராட்டங்களில் முதன்மையாக திகழ்ந்து அம் மக்களுக்கு இன்னோரண்ண உரிமைகளைப் பெற்றுக் கொடுத்த சௌமிய மூர்த்தி தொண்டமானின் பேரன் என்ற பெருமைக்கு மகுடம் சூட்டும் வகையில் 1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பாராளுமன்றில் உறுப்பினராக இருந்து வந்ததுடன், பல அமைச்சுப் பதவிகளையும் வகித்தவராவார்.

தனது அரசியல் பிரவேசத்தை 1990 களில் மேற்கொண்ட அவர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளர், பொதுச் செயலாளர், தலைவர் என படி முறை பதவிகளால் அரசியல் சாசனத்துக்கு அர்த்தம் கொடுத்துள்ளார்.

தனது பேச்சில் ஒரு வீரியமும், தனது அரசியல் போக்கில் தனிக் கொள்கையும் கொண்டிருந்த அவர் மலையக மக்கள் உரிமை, அபிவிருத்தி விடயங்களில் பெரும் பாங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான் அறிந்த வகையில், அவருக்கான மக்கள் செல்வாக்கும் மங்கியதில்லை. தனது பாட்டனாரின் பலமான கட்சியின் வாரிசாக அரசியலில் பரிணாமித்து, சேவைகள் பல புரிந்த அவர், தனது குறுகிய வயதினிலேயே இறை எய்தியுள்ளமை பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் விதைத்துள்ளது.

உள்ளூர் மாத்திரமன்றி வெளிநாட்டு அரசியலவாதிகளுடனும் குறிப்பாக இந்திய அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முனைப்புடன் பங்காற்றியுள்ளார்.

அவரின் பிரிவு என்றுமே மறக்க முடியாத ஒரு சுவடாக ஆகிவிட்டது. அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவால் துயர் கொண்டிருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை மன வேதனையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!