பண்முக ஆளுமையை இழந்துள்ளது சமூகம்!

‘நமது சமூகம் ஒரு பன்முக ஆளுமையை இழந்து நிற்கிறது’

– இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாடறிந்த முஸ்லிம் கல்விமானான கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் இழப்பு நவீன உலகின் இஸ்லாமிய சிந்தனையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் இளைஞர்களின் கல்வி அறிவு, தொழில்வாய்ப்புக்களை கருத்திற் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜாமியா நளீமிய்யா அரபுக் கல்லூரி,இக்ரஹ் தொழினுட்பக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து கலாநிதி சுக்ரி அவர்கள் ஆற்றிய பங்களிப்புக்கள் எமது சமூகத்தில் விலைமதிக்க முடியாதவை.

இறுதி வரைக்கும் ஜாமிய்யா நளீமிய்யாவின் பணிப்பாளராக இருந்து அவராற்றிய சேவைகளால் எத்தனையோ முஸ்லிம் இளைஞர்களின் கல்விக் கண்கள் திறக்க வைக்கப்பட்டுள்ளன.

மரணிக்கும் வரையிலும் அந்நார் அறிவுப் பணி, கல்விப் பணிகளுக்கு ஆற்றிய பங்களிப்புக்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

விஷேடமாக ரமழானில் அதிலும் சிறப்பாக நரக விடுதலையளிக்கப்படும் கடைசிப்பத்தில் அல்லாஹ் அவரை அழைத்துக் கொண்டமை எமக்குப் படிப்பினையாகவே உள்ளது.

ஆயிரம் மாதங்களையும் விடச் சிறந்த இரவாகக் கருதப்படும் புனித “லைலத்துல் கத்ரை” எதிர்பார்க்கும் ஒற்றைப்பட்ட நாளில் அவருடைய ஆத்மா இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளது.
‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’

சமூகத்துக்காகப் பொருந்திக் கொண்டோரை அல்லாஹ், இவ்வாறே கண்ணியப் படுத்துகிறான். கலாநிதி சுக்ரியின் கல்விப் புலமை, மார்க்க விடயங்களிலும், நவீன பித்னாக்களுக்கும் அவர் வழங்கிய வியாக்கியானங்கள் இலங்கையில் மட்டுமல்ல தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் எல்லா நாடுகளிலும் பேசப்படுகிறது. மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற அவரது சகோதர மொழியிலான இஸ்லாமிய பிரச்சாரங்கள், ஏனைய சமூகத்தவர்களும் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள உதவியது.

சுக்ரி போன்றோரின் மார்க்கப் புலமை, விசாலமான பார்வை, ஆழ்ந்த அறிவுகளாலே இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளைத் தோற்கடிக்க முடியுமென்றும் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!