ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்தால் தீவிரவாதிகள் தோண்டி எடுத்து வைரஸை பரப்பி விடுவார்களாம் : நாங்கள் ஏன் பிரதமர் கூட்டிய கூட்டத்தை நிராகரித்தோம் – மனம் திறந்தார் ஹரீஸ் எம்.பி !!

– அபு ஹின்ஸா-

முஸ்லிங்களின் ஈமான், மத நம்பிக்கை போன்றவற்றை கருத்தில் கொள்ளாது எரிக்கப்படும் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் பிரதமரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியாக சந்தித்துப்பேச நேரம் கேட்டு அதை நிராகரித்து விட்டு மாற்றுமத அமைச்சர்களான உதயன் கம்பன்வில, விமல் வீரவம்ச போன்றோர்களை வைத்து கொண்டு பொது வெளியில் பேச பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அழைத்தார். அக்கூட்டத்தில் எங்களின் சார்பு விடயங்களை பேச முடியாது போனதுடன் சுமூகமாக எந்த தீர்மானமும் எட்ட முடியவில்லை.

ஜனாஸா எரிப்பு விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் சகல சகோதரர்களும் எல்லா பேதங்களையும் கடந்து அதிக கோபத்துடனும், விமர்சனங்களுடனும் இருக்கும் இவ்வேளையில் தனியாக நேரம் தர முடியாது என்ற அரச தரப்பினருடன் “கூட்டத்துடன் கோவிந்தா போட முடியாது” என்ற காரணத்தினாலையே நாங்கள் பிரதமர் கூட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நிராகரித்தோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் தரப்பினர் பிரதமரின் அழைப்பை நிராகரித்தமை தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

225 முன்னாள் எம்.பிக்கள் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் சமூகம் சார்ந்த எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. சிறுபான்மை அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேசி ஒரு முடிவை பெற்றிருக்க முடியும். ஆனால் அவர்களும் அதை செய்ய முன்வரவில்லை.

முதலாவதாக நாங்கள் கோரிய நேரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் வழங்காமையினால் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை அறிந்து கொள்ள முடியாமல் போனது. அவரினால் இரண்டாம் கூட்டத்தில் பொது வெளியில் வைத்து பேசப்படும் எந்த விடயமும் சரிவர கேட்கமுடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் எங்களால் அங்கு எதையும் சாதிக்க முடியாமல் போகும்.

முதல் முறையாக பிரதமரை ஜனாஸா எரிப்பு விடயமாக சந்தித்த போது தெளிவாக விளக்கினோம். அதன் பின்னர் வைத்திய கலாநிதிகள், பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் பிரதமர் மஹிந்தவையையும், சுகாதார அமைச்சினதும், திணைக்களத்தினதும் உயரதிகாரிகளை சந்தித்து பேசினர். பேராசிரியர் கமர்த்தீன், பேராசிரியர் றிஸ்வி ஷரிஃப் போன்றோர்கள் சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், ஆய்வுகளின் முடிவுகள், விஞ்ஞான விளக்கங்கள் போன்றவற்றை முன்னிறுத்தி நியாயங்களை முன்வைத்த போது நிலத்தடி நீர்மட்டம் மூலம் கொரோணா தாக்கம் வரும் என சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இது பொய்யான தகவல் என முஸ்லிங்களின் தரப்பில் சென்றிருந்த புத்திஜீவிகள் குழு ஆய்வுகளின் முடிவுகள், விஞ்ஞான விளக்கங்கள் போன்றவற்றை முன்னிறுத்தி விளக்கமளித்தார்கள். செய்வதறியாது அரச அதிகாரிகளால் இறுதியில் அரசியல் பேசப்பட்டது.

முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்தால் தீவிரவாதிகள் தோண்டி எடுத்து வைரஸை பரப்பி விடுவார்கள் என்று அபாண்டமான ஒரு பொய்யான கருத்தை முன்வைத்து நல்லடக்கம் செய்ய மறுத்துள்ளார்கள். இது அரசியல் ரீதியான கருத்தே அன்றி வேறில்லை. மரணித்த உடலில் இருந்து வைரஸ் கிருமிகள் பரவாது என்பதை நாங்கள் அறியாமலும் இல்லை.

தெற்கிலுள்ள சிங்கள மக்களுக்கும், பௌத்த மகாநாயக்க தேரர்களுக்கும், இனவாத போக்குள்ள அரசியல்வாதிகளின்  ஆதரவாளர்களுக்கும் நாங்களே சமூக ஆர்வலர்கள் என்றும், எங்களால் முஸ்லிங்களின் உரிமைகளை மட்டுப்படுத்த முடியும் என்றும், அவர்களின் இறுதிக்கிரிகளைகளை கூட எப்படி நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்திகள் நாங்கள் தான் என்றும் தங்களை பலமானவர்களாக காட்ட எங்களின் ஜனாஸாக்களை தீக்கிரையாக்குகிறார்கள். நோன்பு காலத்தில் பெரியவர், சிறியவர், உலமாக்கள், அல்-ஹாபீழ்கள் என எல்லோரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு தான் இருக்கிறோம். இவற்றுக்கான கூலி விரைவில் இறைவனிடமிருந்து இவர்களுக்கு கிடைக்கும்.

ஜனாதிபதி கோத்தாபய பதவிக்கு வந்த பின்னர் முஸ்லிங்களை அனுசரித்து செல்வார் என்ற நம்பிக்கையை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி போன்றோர் வழங்கியிருந்தனர். ஆனால் இப்போது இந்த அரசின் தவறை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கடுமையாக கண்டித்து வருகிறார். ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரியும் ஜனாஸா எரிப்பு விடயத்தில் தனது அதிருப்தியை வெளியிட்டிருப்பதாகவும், முரண்பாடுகள் உள்ளதாகவும் அறிகின்றேன். முஸ்லிம் பெரியார்களையும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினரையும், எமது மௌலவிகளையும் கடந்த காலங்களில் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ஹெலிகெப்டர் மூலம் அழைத்துச்சென்று இப்தார் செய்த இப்போதை ஜனாதிபதி கோத்தாபய அவர்கள் கூட முஸ்லிம் ஜனாஸா விடயத்தில் முஸ்லிங்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை என்பது கவலையான விடயம்.

ஜனாஸா எரிப்பு விடயத்தில் முஸ்லிங்களின் அதிருப்தியலை இந்த நாட்டில் உருவாகியபோது இந்த அரசை நிறுவ கடுமையாக உழைத்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி போன்றோர்களையாவது அரச தரப்பு அழைத்து பேசியிருக்க வேண்டும். அவ்வாறும் செய்யாமல் விட்டது ஏமாற்றமான விடயமாக உள்ளது. இந்த எரிப்பு விடயத்தில் முஸ்லிம் இளைஞர்கள் கொதித்தெழும்பி  கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுக்க வாய்ப்பிருந்தும் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக எதுவும் செய்யமுடியாமல் போனது. இருந்தாலும் தமது கண்டனங்களையும், எதிர்ப்புக்களையும் சாத்வீக ரீதியாக நாகரிகமாக தெரிவித்துவருகிறார்கள். முஸ்லிங்களின் உணர்வுகளை ஜனாதிபதி அவர்களுக்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், முஸ்லிம் எம்.பிக்கள் எடுத்துரைக்க ஜனாதிபதிக்கு அருகில் இருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி போன்றோர் ஏற்பாடுகளை விரைவில் செய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!