முஸ்லிங்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு முஸ்லிம் தலைவர்களே பொறுப்பு : முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா.

(நூருல் ஹுதா உமர்)

கொரோனா தொற்று காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய அனுமதிப்பதற்கு அரசாங்கம் ஆரம்பத்தில் தயாராகவே இருந்தது, ஆயினும் குறுகிய சுய இலாப முஸ்லிம் தலைவர்களின் வீம்பு பேச்சுகள்தான் கெடுத்து விட்டன என்று உயர் கல்வி முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.

இவர் இது குறித்து கல்முனையில் நேற்று (11) ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தவை வருமாறு

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. யானை அதன் தலையிலே அதுவாகவே மண்ணை அள்ளி போடும் என்பார்கள். அந்த முஸ்லிம் தலைவர்களின் பேச்சுகள் சிங்கள பெரும்பான்மை மக்களை கிளர்ந்தெழ வைத்து விட்டன.

அதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவேதான் அரசாங்கம் அதன் ஆரம்ப நிலைப்பாட்டில் இருந்து நழுவ வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தது. எனவே அரசாங்கத்தை இப்போது குறை கூறுவதில் எந்த அர்த்தமும் கிடையாது. அதற்கு உண்மையில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் அந்த முஸ்லிம் தலைவர்களேதான் ஆவர்.

எமது நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக ஸ்ரீலங்கா விளங்குகின்றது. இதற்கு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் தீர்க்கதரிசனம், தூர நோக்கு, தெளிந்த சிந்தனை ஆகியவற்றுடன் கூடிய முன்னெடுப்புகளே காரணம் ஆகும். மைத்திரிபால சிறிசேன அல்லது ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டின் தற்போதைய தலைவர் என்றாகி இருந்தால் எல்லாமே அழிவுமயமாக மாறி இருக்கும் என்று இந்நாட்டு மக்கள் அனைவருமே வெளிப்படையாக பேசுவதை செவிமடுக்க முடிகின்றது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதாலோ அல்லது முடிவுறுத்தப்படுவதாலோ கொரோனா பல்கி பெருகி விடும் என்கிற அச்சம் அடிப்படை அற்றதும் அநாவசியமானதும் ஆகும். கடந்த நாட்களில் கடற்படையினருக்குதான் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கின்றது. மாறாக பொதுமக்களுக்கு அல்ல. எனவே பொதுமக்களின் நடமாட்டங்கள் போன்றவை மூலம் கொரோனா தொற்று பெரிதும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று எழுந்தமானமாக சொல்லி விட முடியாது.

ஆனால் எதிர் கட்சிகள் அரசியல் நன்மைகளை மாத்திரம் உத்தேசித்து இவ்வாறான பொய்களை கட்டவிழ்த்து விட்டு மக்களை குழப்ப முயற்சிக்கின்றன. முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய அரசாங்கம் விரைவில் அனுமதிக்கும் என்று நான் நம்புகின்றேன். அதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. இந்நாட்டு மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற நாள் வெகுதொலைவில் இல்லை என்றார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!