பட்டம் விடுவதை பார்வையிட சென்ற சிறுவர்களே மரணம்!

பட்டம் விடுவதை பார்வையிட சென்ற இரு ஆண் சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறு போன்ற ஒரு குழியில்  தவறி  வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பகுதியில் கடந்த சனிக்கிழமை(9) மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலும் குறித்த கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்த இரு சிறுவர்களது சடலங்களும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை சம்பவ இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை(10) சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எமு.நெளபீர் தலைமையில் சென்ற குழுவினர்  காலை  அம்பாறையில் இருந்து வருகை தந்த தடயவியல் பொலிஸாருக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருவதுடன்    உயிரிழந்த சிறுவர்கள் வீழ்ந்த கிணறு மற்றும் சுற்றுச்சூழலில்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகினறனர்.

பின்னணி

சம்மாந்துறையில் 3 மற்றும் 6 வயதுடைய 2 குழந்தைகள் கிணறு போன்ற ஒரு குழியில்  விழுந்து உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவர்களின் தாய் சிற்றுண்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்துள்ளார்.அதே வேளை உயிரிழந்த சிறுவர்கள் இருவரும் அருகில் உள்ள சிறுவர்கள் பட்டம் விடுவதை பார்வையிட அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.இவ்வாறு சென்ற இரு ஆண் சிறுவர்களும் சனிக்கிழமை(9) மாலை 4.30 மணியளவில் கிணறு போன்ற ஒரு குழியில் தவறி  விழுந்து உயிரிழந்துள்ளனர்.சிறுவர்கள் வீழ்ந்த கிணறு போன்ற குழி உள்ள பகுதி அவர்களின் வீட்டில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர்கள்  சிராஜ் சிபாம்(வயது-6) சிராஜ் ரிஸ்ஹி(வயது-3) ஆகிய சிறுவர்கள்   ஆவர்.உயிரிழந்த சிறுவர்களின் தந்தை வேலைவாய்ப்பிற்காக மத்தியகிழக்கு நாடோன்றில் பணி புரிந்து வருகின்றார்.

இது விடயமாக சம்மாந்துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபாவிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது சனிக்கிழமை(9)   மாலை   குறித்த சிறுவர்கள்  கிணறு போன்ற குழியில் தவறி வீழ்ந்து  மூழ்கியவண்ணம் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள். ஆனால் அச்சிறுவர்கள்  ஸ்தலத்திலேயே உயிர் நீத்துள்ளனர். இது குறித்து    விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

(ஐ.எல்.எம் நாஸிம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!