சர்வதேச நியதிகளை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் : தேசிய காங்கிரஸ் கொள்கை அமுலாக்கள் செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் !

உலகின் சகல பகுதிகளிலும் கொரானா தொற்றுக்காரணமாக மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது. மட்டுமின்றி சனத்தொகை கூடிய நாடுகளில் பலவற்றிலும் இவ்வாறான இறப்புகள் சமீபத்திய நாட்களில் அதிகமாக சம்பவித்து வருகிறது. அந்த ஜனாஸாக்கள் இஸ்லாமிய ஒழுங்குகள் செய்யப்பட்டு ஜனாஸா தொழுகையின் பின்னர் ஆழமான குழிகளில் நல்லடக்கம் செய்யப்படுபடுகின்ற போதும் பாதிப்பில் சிறியளவிலான தாக்கத்தை மட்டுமே கொண்ட எமது நாட்டில் மட்டும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது சகல முஸ்லிம் மக்களுக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் கொள்கை அமுலாக்கள், சட்டம் ஒழுங்குகள் பிரிவின் செயலாளருமான சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.

மருதமுனையில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் அங்கு பேசுகையில்,

முஸ்லிம் ஒருவரின் ஜனாஸா என்பது இஸ்லாமிய ஒழுங்கள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இந்த நிலையில் எமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கியதாக கூறப்படுகின்ற முஸ்லிங்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமை முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த துக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் படி ஒரு பிரஜைக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை கூட மறுக்கின்ற செயலாகவே இந்த எரிப்பு சம்பவங்கள் அமைந்துள்ளது வருத்தமளிக்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், நாட்டை சரியான பாதையில் வழிநடத்தவும் பாடுபட்டு உழைத்திக்கொண்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களும் முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் சர்வதேச சுகாதார ஸ்தாபன அறிக்கைகளை கொண்டு ஏனைய நாடுகளில் முஸ்லிம் ஜனாஸாக்களி நல்லடக்கம் செய்ய அனுமதிப்பது போன்று இலங்கையிலும் அனுமதிப்பதிப்பதற்கான முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எமது நாட்டில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட விடயம் முஸ்லிம் மக்களின் மனங்களில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அரசாங்கம் செய்தது போன்று முஸ்லிங்களுக்கு எதிரான செயற்பாடுகளை இந்த அரசாங்கத்தில் செய்ய முடியாது என்பதை நிரூபிக்கும் வண்ணம் சில இனவாத முகங்களை உடன் களைந்தெறியும் வழிமுறைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமானதாகும்.

இதேவேளை, இவ்வாறான எரியூட்டும் நிலை தொடருமானால் தொற்று ஏற்பட்டு தாம் மரணித்தால் தனது ஜனாஸா எரியூட்டப்பட்டுவிடும் என பயந்து கொரானா தொற்றுக்குள்ளாகும் எந்த இன மக்களாக இருந்தாலும் தமது நோய் தொற்றை மறைக்கும் அபாய நிலை எமது நாட்டில் ஏற்படலாம். என்பதை கவனத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக முஸ்லிங்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!