சமூக ஊடக பதிவுகளுக்கு சட்டத்தின் மூலம் தடைகளை ஏற்படுத்தல்

இலங்கையின் சட்ட ஏற்பாடுகள் குறித்த அறிமுகம்
சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி Medialk.com Tamil

பின்னணி-
முகநூல் உட்பட சமூக ஊடகங்கள் இலங்கையில் மிக வேகமாக பிரபல்யம் பெற்றுள்ளதோடு, அவற்றில் பகிரப்படும் விடயங்கள் ஏனைய ஊடகங்களைவிட வேகமாக பொது மக்களைச் சென்றடைவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் தொழில்சார் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக பாவனை குறித்த பரீட்சயமுள்ளவர்கள் மாத்திரமல்ல.

அதன் காரணமாக, சமூக ஊடகங்களில் தகவல்களைப் பதிவிடுவோர் மற்றும் பதிவுகளைப் பகிர்வோர் கீழ்வரும் சட்ட ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையின் சட்ட ஏற்பாடுகளுக்கு ஏற்ப சமூக ஊடகங்களில் பதிவிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள பதிவுகள், ஆக்கங்கள் குறித்து சுருக்கமாக தெளிவுபடுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஆபாச வெளியீடுகள்

ஆபாச வெளியீடுகளைப் பதிவிடுவது தொடர்பாக இலங்கையில் இரண்டு சட்ட ஏற்பாடுகள் தொழிற்படுகின்றன. இதுதொடர்பாக காணப்படும் பழமையான சட்டமாக தண்டனைச் சட்டம் காணப்படுகின்றது. தண்டனைச் சட்டக் கோவையின் 285ஆவது பிரிவுக்கு ஏற்ப ஆபாச நூலொன்று, துண்டுப் பிரசுரமொன்று, வரையப்பட்ட காகிதமொன்று, சித்திரமொன்று, புகைப்படமொன்று, காட்சியொன்று அல்லது படமொன்றை பொது மக்கள் காட்சிக்கு வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதேபோன்று, 1927ஆம் ஆண்டு இலக்கம் 4 ஆபாச வெளியீட்டு சட்ட மூலத்திற்கு ஏற்ப ஆபாச சித்திரம், புகைப்படம், வீடியோ போன்றவற்றை விநியோகித்தல் மற்றும் பொது மக்கள் காட்சிக்கு வைத்தல் போன்றனவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதற்கேற்ப, மேற்படி சட்ட ஏற்பாடுகளின் கீழ் வரும் வெளியீடுகள், பதிவுகள், பகிர்வுகளை தமது சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு மதத்தை அவமதிக்கும் விதமாக அல்லது இன வெறுப்பை ஏற்படுத்தும் விதமான வெளியீடுகள்
ஒரு மதத்துக்கு அவமதிப்பு ஏற்படும் விதத்தில் அல்லது மத ரீதியான அல்லது இன ரீதியான வெறுப்பை ஏற்படுத்தும் விதத்தில் பகிரப்படும் வெளியீடுகள் சட்ட விரோதமானவை என்பதைக் கூறும் 4 சட்டங்கள் இலங்கையின் சட்ட ஏற்பாடுகளில் காணப்படுகின்றன.

2007ஆம் ஆண்டின் இலக்கம் 57 சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச சட்டத்தின் 3 ஆவது பிரிவுக்கு ஏற்ப ஆளெவரும் போரைப் பரப்புதலோ அல்லது பாரபட்சத்தை, எதிர்ப்பு உணர்ச்சியை அல்லது வன்முறையைத் தூண்டுவதாக அமையும் தேசிய, இன அல்லது மத ரீதியிலான பகைமையை ஆதரித்தலோ குற்றமாகும். அதற்கேற்ப, மேற்படி விடயங்களைத் தூண்டும் சமூக ஊடக பதிவுகள் இடுவது, பகிர்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதேபோன்று, தண்டனைச் சட்டக் கோவையின் 291 (2) பிரிவுக்கமைய எழுத்துமூலம், வாய்மொழி மூலம் அல்லது செய்கையின் மூலம் ஒரு மதத்தை அல்லது ஒரு மத நம்பிக்கையை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, சமூக ஊடகங்களில் இதுபோன்ற விடயங்களைப் பகிர்வது குற்றமாகும்.

அதேபோன்று, 1979ஆம் ஆண்டு இலக்கம் 48 பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 (அ) (ஊ) பிரிவுக்கு ஏற்ப பல்வேறு மக்கள் குழுக்களுக்கு இடையே இனவாத உணர்வுகளைத் தூண்டுவது குற்றமாகும். அவ்வாறான இனவாத உணர்வுகள் மேலெழும் பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

குற்றங்கள் தொடர்பான சில பதிப்புகள்

தண்டனைச் சட்டக் கோவையின் 365 (சீ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு ஏற்ப பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான ஒருவரின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமான தகவல்களைப் பதிவிடக் கூடாது.

அதேபோன்று, 2005ஆம் ஆண்டு இலக்கம் 34 வீட்டு வன்முறை தடுப்புச் சட்டத்தின் 20ஆம் பிரிவுக்கு ஏற்ப, இந்த சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் பங்குதாரர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமான தகவல்களைப் பதிவிடுவதும் குற்றமாகும்.

இதன் காரணமாக, குற்றங்கள் குறித்து அல்லது நீதிமன்ற விடயங்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, மேற்படி சட்ட ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமான பதிப்புகள்

நீதிமன்றத்தை அவமதிப்பது தொடர்பான விதிகள் அரசியலமைப்பின் பிரிவு 105 (3) குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது ஏனைய நீதிமன்றங்களை அந்தந்த நீதிமன்றத்துக்கு முன்னால் அல்லது வேறு இடங்களில் அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டால், அது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய குறித்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது. அத்தோடு, உயர் நீதிமன்றத்தை அவமதித்தால், அதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மாத்திரமே வழக்கு தொடரப்படும்.

நீதிமன்றத்தை அவமதித்தல் என்பது இவ்வாறுதான் என முறையாக வரையறுக்கப்பட்ட எழுதப்பட்ட சட்டங்கள் எதுவும் இல்லை. வழக்கு விசாரணைகளின் போதே, சந்தர்ப்பத்துக்கேற்ப தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். எனவே, நீதிமன்றத்துடன் தொடர்புடைய விடயங்களை நாம் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போது அதிக கவனம் தேவை.

பாராளுமன்றத்தை அவமதிக்கும் விதமான பதிப்புகள்
1931ஆம் ஆண்டு 21ஆம் இலக்க பாராளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள்) சட்டத்தின் முதலாவது துணை ஆவணத்திற்கு ஏற்ப பாராளுமன்ற விவாதமொன்று தொடர்பாக தவறான தகவல்களை அறிக்கையிடல், பாராளுமன்றம் வெளியிடுவதைத் தடுத்த அறிக்கையொன்றை வெளியிடல், ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ள பகுதியொன்றைப் பிரசுரித்தல், பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அவமதிப்பு கருத்துக்களை வெளியிடல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாடுகள் தொடர்பில் அவமதிக்கும் விதமான கருத்துக்களை வெளியிடல் என்பன குற்றமாகும்.

மேற்படி சட்ட வரையறைகளுக்குள் பாராளுமன்றத்தை அவமதிக்கும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பிரசுரிப்பது, பகிர்வது குற்றமாகும்.

தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பதிப்புகள்

1955ஆம் ஆண்டு 31ஆம் இலக்க அரச இரகசியங்கள் சட்டத்தின் 6 (1) பிரிவுக்கு ஏற்ப ஏதாவதொரு உத்தியோகபூர்வ இரகசிய ஆவணமொன்றை எதிரியொருவர் பயனடையும் வகையில் அறிக்கையிடல், வெளியிடல் அல்லது தொடர்பாடல் மேற்கொள்ளல் குற்றமாகும்.

1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வரும் உத்தரவுகள் மூலம் தடை செய்யப்பட்டுள்ளவைகளை வெளியிடுவதும் குற்றமாகும்.

அதேபோன்று, 2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணினிக் குற்றச் சட்டத்தின் 6ஆவது பிரிவுக்கு ஏற்ப கணினியொன்றைப் பயன்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு, தேசிய பொருளாதாரத்துக்கு அல்லது பொது மக்கள் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தல் அல்லது அதனுடன் தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட வழிவகைகள் செய்வது குற்றமாகும். எனவே, சமூக வலைத்தளங்கள் மூலம் (சமூக ஊடக பாவனை கணினியின் ஊடாக மேற்கொள்ளப்படும் காரணத்தினால்) மேற்படி விடயங்களைப் பாதிக்கும் விதமான பதிப்புகளை வெளியிடுவது குற்றமாகும்.

நாட்டினுள் அவசர கால நிலைமை அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அவசர கால சட்ட விதிமுறைகள் மூலம் தடை செய்யப்பட்டுள்ள சில வெளியீடுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

புலமைச் சொத்துச் சட்டத்திற்கு முரணான வெளியீடுகள்

2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச் சொத்துச் சட்டத்தின் 6ஆவது பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட படைப்புகள் என்று கருதப்படும் படைப்பொன்றின் ஆசிரியர் அல்லது படைப்பாளியின் முறையான அனுமதியின்றி குறித்த படைப்பொன்றை அல்லது அதன் பகுதியொன்றை வெளியிடுதல் பதிப்புரிமையை மீறும் செயலாகும்.

சிவில் அவமதிப்புக்கு வழிவகுக்கும் வெளியீடுகள்

ஒருவரை அல்லது ஒரு குழுவினரை அவமதிக்கும் விதமான அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டால், சிவில் அவமதிப்பு வழக்கொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

அவமதிப்பு அல்லது அவதூறு வெளியீடுகள் என்பதன் மூலம் கருதப்படுவது யாதெனில், குறித்த விடயம் சம்பந்தப்பட்ட நபருக்கு நேரடி தொடர்புடையதாக இருத்தல் அல்லது அவமதிப்பு மிக்க விடயங்களை வெளியீட்டில் உள்ளடக்கியிருப்பதாகும். சிவில் அவமதிப்புக்கான சிறந்த பாதுகாப்பு குறித்த நபரின் அனுமதியைப் பெற்றிருத்தல் அல்லது பொது நலனின் அடிப்படையில் தகவல்களை வெளியிடல் போன்றனவாகும். எனவே, ஒரு பொது நலனைக் கருத்தில் கொண்டு, ஒரு தனிநபர் தொடர்பான உண்மையான தகவலொன்றை வெளியிடுவதால், குறித்த நபருக்கு அவமதிப்பு ஏற்பட்டாலும் அது சிவில் அவமதிப்பு குற்றத்தின் கீழ் உள்ளடங்காது.

இறுதியாக…

சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை எழுத்துக்கள், படங்கள் அல்லது வீடியோக்கள் மூலம் பதிவிடும் போது மேற்படி சட்ட ஏற்பாடுகள் குறித்து கவனமெடுத்து நடந்து கொள்வதன் மூலம் நீங்கள் சட்ட ரீதியான சிக்கல்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமாகும். அதேபோன்று, இந்த விடயங்களில் கரிசனையெடுக்கும் போது, தடையின்றி சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்.

தமிழில்: ஆதில் அலி சப்ரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!