கொரோனாவுக்கு பிந்திய இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு உதவ சீனா தயார்

“இலங்கை சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக தொடர்ச்சியான சுமுகமான உறவுகள் இருந்துவருகின்து. அண்மையில் நாம் கொவிட் 19 அனர்த்தத்திற்கு முகம்கொடுத்திருந்த போது நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள். கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க சீனா தயாராகவுள்ளது” என்று இலங்கையின் பதில் சீன தூதுவர் ஹு வெய் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போது தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் சுமுகமான கலந்துரையாடலொன்றில் ஈடுபட்ட பதில் தூதுவர் ‘உண்மையான நட்பு மகிழ்ச்சியின் போதும் கஷ்டத்தின் போதும் ஒன்றாக இருப்பதாகும்’ என்ற சீன நாட்டு கூற்றொன்றையும் குறிப்பிட்டார். இலங்கை தமது நாடு தொடர்பில் பின்பற்றிய அந்த கொள்கைக்கு தனது நாடும் மக்களும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே இலங்கையின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்காக உதவுவது சீனாவின் எதிர்பார்ப்பாகும் என்றும் சீன பதில் தூதுவர் சுட்டிக்காட்டினார். கொரோனாவுக்கு பிந்திய இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அந்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறப்பர் – அரிசி ஒப்பந்தம் காலம் முதல் சீனா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள் போர் இடம்பெற்ற காலத்திலும் போருக்கு பின்னரான பொருளாதார அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் சீனாவிடமிருந்து குறிப்பிடத்தக்க ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

கொவிட் 19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரத்திற்கும் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அந்நியச் செலாவணி வருமானம் பெருமளவு வீழ்ச்சியடைந்திருப்பது முக்கிய பிரச்சினையாகும் என்றும் குறிப்பிட்டார்.

உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஆடைக் கைத்தொழில் மற்றும் சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் வருமானமும் இல்லாமல் போயுள்ளது. பொருளாதார வீழ்ச்சியை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு இன்னும் காலம் செல்லலாம். இலங்கை உற்பத்தி பொருளாதாரத்தின் அடிப்படையிலான புதிய அபிவிருத்தி மாதிரியொன்றை பின்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அதனை வெற்றிகொள்வதற்கு நட்பு நாடுகளின் உதவியை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

‘எமது ஒரே எதிர்பார்ப்பு கடன் அல்லது நிதி உதவியை பெற்றுக்கொள்வதன்று. உற்பத்தியை அதிகரிப்பதற்கு பங்களிக்கும் வகையில் முதலீடுகளை கொண்டுவருவது முக்கிய இலக்காகும். விவசாய உற்பத்திகள் மற்றும் நிர்மாணத் துறை போன்ற பல துறைகளில் வெளிநாட்டு முதலீட்டுக்கான அநேக வாய்ப்புகள் உள்ளன. அதிலிருந்து பயன்பெறுமாறு சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

கொவிட் 19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து சீனாவின் பதில் தூதுவர் வினவியதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், மொத்தமாக நோக்கும் போது நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஓரிரு நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணத்தை விளக்கிய ஜனாதிபதி அவர்கள், அந்த நிலைமைகளை விளங்கிக்கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

‘ஜனாதிபதி அவர்களே நாம் உங்களுடன் இருக்கின்றோம்’ என பதில் சீன தூதுவர் இந்த சுமுகமான கலந்துரையாடலின் இறுதியில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர அவர்களும் சீன தூதுவராலயத்தின் அரசியல் துறை தலைவர் லூஓ அவர்களும் இக்கலந்துரையாடலின் போது பிரசன்னமாகியிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!