கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அக்கரைப்பற்றில் முடக்கப்பட்ட பகுதி விடுவிக்கப்பட்டது-வைத்தியர் சுகுணன்

பாறுக் ஷிஹான்
 
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி மூன்று வாரங்களின் பின்னர் இன்று (29)  திறந்து விடப்பட்டதனால் அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம்அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு  குறித்த நபர்கள் வசித்து வந்த பிரதேசமே முடக்கி வைக்கப்பட்டு இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது.

இம்மாதம் 8 ஆம் திகதி இப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் இனங்காணப்பட்டதனைத் தொடர்ந்து இப்பிரதேசம் முடக்கப்பட்டது. பின்னர் இப்பகுதியில் இரண்டாவது நபரும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தொற்றுக்குள்ளான நபர்கள் வசித்து வந்த பிரதேசம்  சுமார் 500 மீற்றர் சுற்றுவட்டாரம் சுமார் மூன்று வாரங்கள் முடக்கப்பட்டிருந்தது. இப்பிரதேசத்தில் வசித்து வந்த சுமார் 320 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வெளிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் குறித்த பிரதேசத்துக்கு வெளிப் பிரதேசத்திலிருந்து வருகை தரும் எவரும் இப்பிரதேசத்தினுள் அனுமதிக்கப்படவுமில்லை.
இப்பிரதேசத்தில் வசித்து வந்த கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட இருவர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் இருவரும் சுகம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களுடன் நேரடி மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்ட சுமார் 75 பேர் பொலன்னறுவை தம்மின்ன தனிமைப்படுத்தல் நிலையத்தில் தமது தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்து மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் நோய்த் தொற்றுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை இவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்பினர்.
எனவே அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இந்நோய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று தெரிவித்த அவர்  ஏனைய பிரதேச  பொதுமக்கள் போல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வழமைபோன்று செயற்படுமாறும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!