அத்தியாவசிய சேவைகள் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும்  வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு 

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு 
உதவும் வகையில் குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் அத்தியாவசிய 
சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் 
என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். 
அரச மற்றும் தனியார் துறைகளின் சேவைகளை மக்கள் வாழ்க்கையை 
இயல்பு நிலையில் பேணுவதற்கு உதவும் வகையில் திட்டமிடுமாறும் 
ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். 
அத்தியாவசிய சேவைகளை வழங்கும் முக்கிய அமைச்சுக்களின் 
செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (21) பிற்பகல் 
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே 
ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். 
நீர்க்குழாய்களை பதித்தல், வீதிகளை நிர்மாணித்தல் போன்ற 
கட்டுப்பாட்டுடன் செய்யக்கூடிய அபிவிருத்தி பணிகளை உடனடியாக 
ஆரம்பிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் 
சுட்டிக்காட்டினார். ஊழியர்களை கடமைக்காக அழைக்கும் போது பின்பற்ற 
வேண்டிய நடைமுறைகள் பற்றியும் அறிவுறுத்திய ஜனாதிபதி அவர்கள் 
வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றி ஊழியர்களை அழைப்பதை 
நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 
மேல் மாகாணம் உட்பட ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் உள்ள 
பிரதேசங்களில் சேவைகளை பேணுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறும் 
ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார். 
போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளின் மூலம் விவசாய 
அறுவடைகளை கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு கொண்டுவருவதற்கு 
நடவடிக்கை எடுப்பதன் மூலம் விவசாயிகளுக்கு பாரிய நிவாரணம் 
கிடைக்கும் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 
வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்கள் வழங்கும் மருந்துகளை தபால் 
அலுவலகத்தின் ஊடாக விநியோகிப்பதன் மூலம் ஊரடங்கு சட்டம் அமுலில் 
இருந்த காலத்தில் நோயாளிகளுக்கு பெரும் சேவையொன்று வழங்கப்பட்டது. 
தபால் அலுவலகத்தின் ஊடாக பட்டியல்களை சேகரித்தல், வங்கி வைப்புகளை 
பொறுப்பேற்றல் உள்ளிட்ட வழங்க முடியுமான சேவைகள் குறித்தும் 
கலந்துரையாடப்பட்டது. 
 
கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு அரசாங்கம் முறையானதொரு 
நிகழ்ச்சித்திட்டத்தை பின்பற்றிய போதும் மக்கள் அறிவுறுத்தல்களை உரிய 
முறையில் பின்பற்றாமை நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு தடையாக 
அமைந்துள்ளது. மக்கள் வாழ்க்கையை இயல்புநிலைக்கு கொண்டு வரும் 
நோக்குடன் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி சேவைகளை முன்னெடுக்கும் 
போதும் வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் 
மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர உட்பட அமைச்சுக்களின் 
செயலாளர்களும் நிறுவனத் தலைவர்களும் இக்கலந்துரையாடலில் 
பங்குபற்றினர்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!