ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் மூவருக்கு கொரோனோ தொற்று உறுதி

பாறுக் ஷிஹான்

ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் மூவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்றிரவு சிலாபம் பகுதியில் அமைந்துள்ள இரணவில கொவிட் நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவிற்கு அனுப்பவுள்ளதாக     கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக சனிக்கிழமை(18) மாலை 6 மணியளவில்  ஊடகவியலளார்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் ஒலவில் பகுதியில்  கடற்படையினரால்  துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  தனிமைப்படுத்தல்    முகாமில் 80 பேர் கொழும்பு ஜா எல    பிரதேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு இருந்தார்கள்.

முதலாவது தொகுதியில் 28 பேரும் இரண்டாவது தொகுதியில் 52 பேரும் ஆக 80 பேர் கொண்டுவரப்பட்டார்கள். இந்த முதலாவது தொகுதியில் கொண்டு வரப்பட்டிருந்த 28 பேரில் 5 பேர் நோய்க்கு உள்ளான அடையாளப்படுத்தப்பட்டு ஏற்கனவே   சிலாபத்தில் அமைந்துள்ள இரணவில பகுதியில் உள்ள    பராமரிக்கும் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள்.அதனைத் தொடர்ந்து நேற்று நாங்கள்   முதல் தொகுதியில்  வந்த  23 பேருக்கான அந்த மாதிரிகளை எடுத்து ஆய்விற்காக  கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பினோம்.

அதன் மூலமாக  அந்த 23 பேரில் 3 பேருக்கு  நோய் தொற்று உள்ளதாக  அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.ஆகவே அந்த 23 பேரில் அந்த மூவரையும்  நாங்கள் தனிமைப்படுத்தி தற்போது  வைத்திருக்கின்றோம் .அவர்களை இன்னும் ஒரு மணி நேரத்தில் நாங்கள் சிலாபத்தில் அமைந்துள்ள இரணவில  பகுதியில் அமைந்துள்ள  கொரோனா  நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவுக்கு அனுப்ப  இருக்கின்றோம்
அங்கு அவர்கள் பராமரிக்கப்படுவார்கள்.ஏனைய  52 பேருக்குமான ஆய்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை    மாதிரிகள் எடுக்கப்பட்டு   கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படும். என குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!