ஊரடங்கு சட்டம் அமுல்- புத்தாண்டு தினத்தில் பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு

பாறுக் ஷிஹான்

புத்தாண்டு தினத்தில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை சவளக்கடை மத்தியமுகாம் அக்கரைப்பற்று  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  பொலிசார் விசேட அதிரடிப்படை  இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை இரவு  பகலாக முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை தொடர்ந்து திங்கட்கிழமை(13) இரவு முதல் செவ்வாய்க்கிழமை(14) முற்பகல் வரை அம்பாறை மாவட்டத்தில் உள்ள மேற்குறித்த பொலிஸ் எல்லைப்பகுதியில் உள்ள முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன் ஊரடங்கு சட்டம் காரணமாக வீட்டில் இருந்து புத்தாண்டு தினத்தினை கொண்டாடுமாறு பொலிஸார் ஒலிபெருக்கி வாயிலாக அடிக்கடி அறிவுறுத்தல்களை செய்து வருவதுடன் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட மட்டில் இடம்பெற்று வருகிறது . மேலும் இப்பகுதியில்  பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி அநாவசியமாக நடமாடி திரிபவர்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக   பொலிசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும்   அம்பாறை   நகரப்பகுதி  கல்முனை மாநகர பகுதி  பெரிய நீலாவணை மருதமுனை பாண்டிருப்பு நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு மணல்சேனை கல்முனைக்குடி சாய்ந்தமருது மாளிகைக்காடு காரைதீவு நிந்தவூர் அட்டப்பளம் மாவடிப்பள்ளி சம்மாந்துறை மல்வத்தை உள்ளிட்ட பகுதிகளில் விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன்
நேற்று  முதல் இன்று அதிகாலை வரை அப்பகுதிகள்  வெறிச்சோடிக்காணப்பட்டன.

சில இடங்களில்  பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர்  வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.இதற்கு மேலதிகமாக இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி விசேட வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு  வருகின்றனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!