மெக்னிபிகா சொகுசு கப்பலில் சேவைசெய்த இலங்கை இளைஞரின் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றினார்

உலகின் எந்தவொரு துறைமுகத்தினாலும் பொறுப்பேற்கப்படாத எம்.எஸ்.சீ. மெக்னிபிகா (MSC Magnifica) கப்பலில் சேவை செய்த ஒரேயொரு இலங்கை இளைஞரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் கடற் படையினர் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

இக்கப்பலில் பயணிகள் மற்றும் பணிக்குழாமினர் உட்பட 2700 பேர் உள்ளனர். ஜனவரி 05 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த இக்கப்பல் உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அவுஸ்திரேலியாவில் சுற்றுலா பயணத்தை நிறுத்தியது. உருவாகியுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு கப்பலை பொறுப்பேற்க எந்தவொரு துறைமுகமும் முன்வரவில்லை. இதன் காரணமாக இத்தாலி நோக்கி பயணமான கப்பல் எரிபொருள் மற்றும் வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தது. இக்கப்பலில் சேவை செய்த ஒரேயொரு இலங்கையரான அநுர பண்டார ஹேரத் இத்தாலிக்கு செல்ல முன்னர் தன்னை இலங்கை கடலில் வைத்து நாட்டுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு தனது முகநூலின் ஊடாக நேற்று (05) கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார். அதனை பார்த்த ஜனாதிபதி அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவுக்கு இளைஞரை நாட்டுக்கு பொறுப்பேற்குமாறு பணிப்புரை விடுத்தார்.

அந்தவகையில், செயற்பட்ட கடற்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அனு துறைக்கான அவசர பிரிவு இன்று (06) அதிகாலை கொழும்பு துறைமுகத்திலிருந்து 9 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கடற் பிரதேசத்தில் வைத்து அநுர பண்டாரவை தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்தது. 75 வயது ஜெர்மன் நாட்டு பெண்ணொருவரையும் சிகிச்சைக்காக அழைத்துவரவும் கடற்படை அவசர பிரிவு உதவி வழங்கியது.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட அநுர பண்டாரவை பூசா கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் ஜெர்மன் நாட்டவரை கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்ததாக கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!