சவளக்கடை கமநல சேவை மத்திய நிலையம் விவசாயிகளின் விடயத்தில் அசமந்தப்போக்கு

(எம்.எம்.ஜபீர்)

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள வயல்களில் விவசாய நடவடிக்கைக்காக நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து செல்லும் விவசாயிகள் கிட்டங்கி பாலத்திற்கு அப்பால் செல்வதில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ள போதிலும் விவசாய மற்றும் அத்தியவசிய சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஒரு சில சேவைகளுக்கு பாஸ் நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இதேவேளை விவசாயிகள் அன்றாட விவசாய நடவடிக்கைகளுக்காக எதுவித தடையுமின்றி செல்ல முடியும் என அரசாங்கம் சுற்று நிருபம் மூலம் அறிவுத்துள்ளது.

இருந்த போதிலும் சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள வயல் பிரதேசத்திற்கு செல்லும் விவசாயிகள் சவளக்கடை இராணுவ சோதனை சாவடியில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது வயல் விதைப்பு மற்றும் களை நாசினி தெளிக்கும் வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடு விவசாய நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆகையால் இதுவிடயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், நாவிதன்வெளி பிரதேச செயலாளர், அம்பாரை மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள், சவளக்கடை விவசாய கேந்திர நிலைய பெரும்பாக உத்தியோகத்தர் ஆகியோர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டு பாஸ் நடைமுறையையாவது ஏற்படுத்தி விவசாய நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு பிரதேச விவசாய அமைப்புக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!