மருதமுனை ஜம்மியத்துல் உலமா மற்றும் அனைத்து பள்ளிகளிவாசல்கள் சம்மேளனத்தின் 3000 பயனாளிகளுக்கான நிவாரண விநியோகம் நாளை !!

(நூருல் ஹுதா உமர்.)

கொரோனா வைரஸ் தொற்றினால் அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலமையினை கருத்திற் கொண்டு மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொதிகளை வழங்குவதற்கு தீர்மானித்தது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல்களில் அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர்களும் கலந்து கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களிற்கமைவாக

மேற்படி நிவாரண விடயங்களினை ஒருங்கிணைக்கும் பொருட்டு பெரியநீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு ஆகிய பள்ளிவாசல்களின் தலைவர்களை உள்ளடக்கியதான அனர்த்த நிவாரண குழு நியமிக்கப்பட்டு அதன் மத்திய நிலையமாக மருதமுனை மஸ்ஜிதுந்நூர் ஜூம்ஆப்பள்ளிவாசலை செயற்படுத்துவதெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. என மருதமுனை ஜம்மியத்துல் உலமா மற்றும் அனைத்து பள்ளிகளிவாசல்கள் சம்மேளனம் அடங்கிய அனர்த்த மத்திய நிலையத்தின் செயலாளர் எம்.எல்.எம்.ஜமால்தீன் தெரிவித்தார்.

தொடர்ந்தும், 1500 ரூபா பெறுமதியான 2000 நிவாரணப் பொதிகளை வழங்குவதெனவும் இதற்காக 30 இலட்சம் ரூபாவினை (3 மில்லியன்) மருதமுனையின் தனவந்தர்கள், பள்ளிவாசல்கள், வெளிநாடுகளில் தொழில்புரியும் மருதமுனை பிரமுகர்கள் மற்றும் பிராந்திய அரசியல் வாதிகள் அனைவரிடமும் உதவிகள் கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி தொகையினை இலக்காகக் கொண்டு அறவீடுகளைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரிடம் உரிய தொகை நேற்று,(02.04.2020ம் திகதி) கிடைக்கப்பெற்றதுடன் அனைத்து பள்ளிவாசல்களின் நிருவாகங்களினூடாக மகல்லா ரீதியாக நிவாரண பொதிகளினை பெறுவதற்கு தகுதியாக பயனாளிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டது.

அரச உத்தியோகத்தர்கள், வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள், தனவந்தர்கள், வருமானம் உள்ள வியாபாரிகள் தவிர்த்து எடுக்கப்பட்ட பட்டியல்களினூடாக சரிபார்க்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கையானது 3000 பேர் என்பது உறுதியானது

இதற்கமைவாக நேற்று வியாழக்கிழமை அனைத்து பள்ளிகளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ.ஹுசைனுத்தீன் (றியாழி) தலைமையில் அனைத்தப்பள்ளிவாசல்களின் தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக ஒரு நிவாரண பொதியின் பெறுமதியினை 1500 ரூபாவிலிருந்து 1200 ரூபாவாக குறைப்பதெனவும் பொதிகளின் எண்ணிக்கைகளினை 2000 யிலிருந்து 3000மாக அதிகரித்து அனைத்து பயனாளிகளுக்கும் வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக நாளை (04.04.2020) அந்தந்த குறித்த பள்ளிவாசல்களினூடாக பயனாளிகளின் வீடுகளிற்கு பொதிகளை விநியோகிப்பதெனவும் இறுதியில் விபரமான கணக்கறிக்கையினை உத்தியோக பூர்வமாக வெளியிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!