அரச வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு தபால்மூலம் மருந்து விநியோகம் – விசேட ஜனாதிபதி செயலணி ஆராய்வு

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, முறையான மருந்துப் பொருள் விநியோகத்தை முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடல், செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸவினால் இன்று (28) அலரி மாளிகையில் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன, தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பேராசிரியர் அசித்த டி சில்வா, இலங்கை மருந்தக வர்த்தக சங்கத்தின் தலைவர் கபில டி சொய்ஸா உள்ளிட்டவர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

நாட்டிற்குள் மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் முறைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

பின்வரும் முடிவுகளும் இதன்போது மேற்கொள்ளப்பட்டன.

  1. அரசாங்க வைத்தியசாலைகளில் பதிவுசெய்யப்பட்ட நோயாளர்களுக்கு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊடாக மருந்துகளை விநியோகித்தல்.
  2. நாட்டிற்குள் இருக்கின்ற தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் விநியோகித்தலுக்கான முறைமையை நடைமுறைப்படுத்தல்.
  3. அரச மருந்தகங்களில் (ராஜ்ய ஒசுசல) இருந்து தபால் திணைக்கள உதவியுடன் மருந்துகளை விநியோகிக்கும் விசேட முறையொன்றை நடைமுறைப்படுத்தல்.
  4. புற்றுநோயாளர்கள் உள்ளிட்ட விசேட மருந்து தேவையுடையவர்களுக்கான விசேட மருந்து விநியோக முறையை தொடர்ந்தும் முன்னெடுத்தல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!