நிவாரணம் வழங்க முடியுமான சிறைக் கைதிகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பணிகள் ஆரம்பம்

சிறு குற்றங்களுக்கு தண்டனையாகவும் பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்ய முடியாமலும் தற்போது சிறைகளில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து கண்டறியுமாறு சட்ட வல்லுனர்களுக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.

சிறு குற்றங்கள் தொடர்பில் சிறைப்படுத்தப்பட்டவர்களுக்கு சட்ட நிவாரணம் வழங்குவதற்கான வழிவகைகள் குறித்து பரிந்துரை செய்வதற்கு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களை சந்தித்த போதே இந்த பணிப்புரை வழங்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அண்மையில் சிறைச்சாலை வளாகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த போது சிறைக் கைதிகள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தண்டப் பணம் செலுத்துவதற்கோ அல்லது பிணைத் தொகையை அல்லது சரீரப் பிணை வழங்குவதற்கோ வசதியில்லாத கைதிகளுக்கு சட்ட ஏற்பாடுகளை வழங்க பரிந்துரைகளை முன்வைப்பதற்காக இக்குழு மார்ச் 26 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களை மீண்டும் சந்திக்கவுள்ளது.

இக்குழுவில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜயசிறி தென்னகோன், ஜனாதிபதியின் சட்டத்துறை நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர, பிரதி சிறைச்சாலைகள் ஆணையாளர் வெனுர குணவர்த்தன, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ, செயலாளர் கௌசல்ய நவரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர சில்வா, சட்டத்தரணி சுசர தினல் ஆகியோர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!