திகாமடுல்ல மாவட்டத்தின் வேட்புமனுத் தாக்கல் நிலவரம் !!

பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பதியப்பட்ட 20 கட்சிகள் 38 சுயேட்சைக் குழுக்கள் உட்பட 58 அரசியல் குழுக்களின் வேட்புமனுத் தாக்கல்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இதில் 4 சுயேட்சைக் குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்புமனுக்கள் நிறைவடைந்த பின்னர் இன்று (வியாழக்கிழமை) மாலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 5 இலட்சத்து 13 ஆயிரத்து 979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.இதில் அம்பாறை மாவட்டத்தின் அம்பாரை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலும் இவர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

அம்பாறை தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 77ஆயிரத்து 144 பேரும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 90 ஆயிரத்து 405 பேரும், கல்முனை தேர்தல் தொகுதியில் 77ஆயிரத்து 637 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 68 ஆயிரத்து 793 பேரும் 2019 ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்கவென 525 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தொகுதிவாரியாக அம்பாறை தேர்தல் தொகுதியில் 181 வாக்கெடுப்பு நிலையங்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 93 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்முனை தேர்தல் தொகுதியில் 74 வாக்களிப்பு நிலையங்களும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!