கொரோனா தொற்று; வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரம் அரசாங்கத்தினால் பிரகடனம் !

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அது ஒரு தொற்று நோய் நிலைமையாக மாறுவதைத் தவிர்ப்பதற்காக செயற்படுவது அனைத்து அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களினதும் பொதுமக்களினதும் பொறுப்பாகும்.

அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதி அரச விடுமுறை நாட்களாக கருதப்பட மாட்டாது. 2020.03.21 மற்றும் 22ஆம் திகதி மட்டும் சாதாரண அரச விடுமுறை நாட்களாக கருதப்படும்.

பொதுமக்கள் சேவையினை தொடர்ச்சியாக பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனினும் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கையாக அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சட்டவாக்க நிறுவனங்கள் உள்ளார்ந்த முறைமையொன்றினை பின்பற்றி மார்ச் 20 முதல் 27 வரை தமது அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்காலத்தில் தெரிவு செய்யப்பட்ட சில அரச சேவைகளை தொலைமுறைமையின் கீழ் செயற்படுத்த இந்த அனுபவம் அடிப்படையாகக் கொள்ளப்படும்.

மக்கள் வாழ்க்கையை வழமையான முறையில் பேணுவதற்கு தேவையான சுகாதார, உள்ளூராட்சி, போக்குவரத்து, வங்கி, உணவு, நீர், மின்சாரம் ஆகிய வழங்கள் சேவைகளும் உர விநியோகம், நெல் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாவட்ட செயலாளர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் அலுவலகங்களின் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். தொலைமுறைமையொன்றை பயன்படுத்தும்போது குறித்த நிறுவனத் தலைவர்கள் முடியுமானளவு தமது பணிக்குழாமை அலுவலகத்திற்கு வரவழைப்பதை முடியமானளவு மட்டுப்படுத்த வேண்டும். அதற்காக மின்னஞ்சல், (E-mail) குறுஞ்செய்தி, (SMS) தொலைபேசி போன்ற தொழிநுட்ப முறைமைகள் போன்ற மாற்று நடைமுறைகளை பயன்படுத்த முடியும்.

பொதுமக்கள் அலுவலகங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்து, பொதுமக்கள் சேவையை உரிய முறையில் தொடர்ச்சியாக முன்னெடுத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்த வேண்டும். இதற்காக தனிப்பட்ட தொலைபேசிகளை பயன்படுத்தும்போது மேலதிக செலவுகள் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் தேவையான நிவாரணங்களை வழங்கும். இத்தகைய சந்தர்ப்பங்களின்போது அரசாங்கத்தின் அனைத்து அதிகாரிகளும் தொடர்ச்சியாக மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு உரிய முறைமையை பின்பற்றுவார்களென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்று நோயாக பரவுவதை தவிர்ப்பதே முக்கிய நோக்கமாகும். எனவே பல்வேறு நிறுவனங்களினூடாக வழங்கப்படும் சேவைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதென்பதால் தமது பணிக்குழாமினரை அறிவூட்டி, பணிக்குழாமினரை மட்டுப்படுத்துவதற்காக தமது நிறுவனங்களில் எழுத்து மூலமான முறைமையொன்றினை ஏற்படுத்திக்கொள்ளல் நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும்.

தனியார் துறைகளும் மேற்படி முறைமைகளுக்கேற்ப தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அனைத்து வர்த்தக சபைகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!