ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பான விவாதம்: பெப். 08 இல் பாராளுமன்றம் கூடும்?

பிணைமுறி மற்றும் நிதி மோசடிகளை கண்டறிவதற்கான ஆணைக்குழுக்களின் இரண்டு அறிக்கைகள் தொடர்பான விவாதத்திற்காக அடுத்த மாதம் 8ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெனியாய மொரவக்கவில் இடம்பெற்ற  கூட்டத்தில் இன்று உரையாற்றுகையில் பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதனால், விவாதத்தை அன்றைய தினம் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர்  குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 7ம் திகதி நிறைவு பெறும். இதற்கமைய, அடுத்த மாதம் 8ம் திகதி பாராளுமன்ற அமர்வை நடத்துமாறும் இதற்கான கடிதங்களை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்குமாறும் தாம் சபாநாயகருக்கு அறிவித்ததாக பிரதமர்  தெரிவித்தார்.
தவறு இழைத்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தாம் ஒழித்திருக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை என்று தெரிவித்த பிரதமர்இ காலவரையறையின்றி பாராளுமன்ற விவாதத்திற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இது தொடர்பான திகதியை கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க முடியும் என்றும்  தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் இரண்டும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் நாட்டில் பாரிய விவாதங்கள் இடம்பெறுகின்றன. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விவாதம் அடுத்த மாதம் 19ம் திகதி நடத்தப்படுவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது என்று கூறிய  பிதமர் இருப்பினும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, பாராளுமன்ற அமர்வை நடத்துமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து கவனத்திற்கொள்ளுமாறு சபாநாயகர் தனக்கு நேற்று எழுத்து மூலம் கேட்டுக்கொண்டதாகவும் பிரதமர்  தெரிவித்ததுடன், இது தொடர்பாக கட்சித் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தி,  தீர்மானத்தை மேற்கொள்ள முடியும். அடுத்த மாதம் 8ம் திகதி பாராளுமன்ற அமர்வை ஏற்பாடு செய்து இரண்டு அறிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவது மாத்திரமே இடம்பெறும் என்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு அல்லது தனக்கு எதிராக எந்தவித விடயங்களும் குறிப்பிடப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!