திறைசேரி முறிகள்; கொடுக்கல் வாங்கல்களில் முறைகேடு – பிரதமர் தெரிவிப்பு

திறைசேரி முறிகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் உரையாற்றினார்.

 

நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் இதுகுறித்து பாராளுமன்றத்திற்கு கூற்றொன்றை முன்வைக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் நிதி நிர்வாகத்தை பாராளுமன்றத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. 2015ஆம் ஆண்டு திறைசேரி கொடுக்கல் வாங்கலுக்கு அமைவான பணிகள் இதனூடாக இடம்பெற்றன. இதுபற்றி பாராளுமன்றத்தின் கோப் குழு நீண்ட விசாரணையை நடத்தியது. தாம் நியமித்த குழுவும் விசாரணைகளை மேற்கொண்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

திறைசேரி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது அவசியம் என்று உரிய அறிக்கைகளில் வலியுத்தப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் இதனுடன் தொடர்புடைய இரண்டு அறிக்கைகள் பாராளுமன்ற சபை முதல்வரின் செயலாளரின் ஊடாக திறைசேரியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக சட்டமா அதிபர் கோரியிருந்த சகல அறிக்கைகளையும், ஆவணங்களையும் சபாநாயகரின் அங்கீகாரத்துடன் சட்டமா அதிபருக்கு அனுப்புமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களம் தனியான சட்டத்தரணிகள் குழுவை நியமித்து இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டமா அதிபருக்கு இதுபற்றி எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 12 பில்லியன் ரூபாவை மத்திய வங்கி பொறுப்பேற்றுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக திறைசேரி கொடுக்கல் வாங்கலின் ஊடாக மத்திய வங்கிக்கு ஏற்பட்ட நட்டம் 11 பில்லியன் ரூபாவாகும். இதற்கு அமைவாக, சட்டமா அதிபர் ஊடாக நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையின் வரலாற்றில் இவ்வாறான விசாரணை நியாயமான முறையிலும், பக்க சார்பின்றியும் நடத்தப்பட்டுள்ளமை இதுவே முதலாவதுசந்தர்ப்பமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பெரும்பாலான திறைசேரி முறிகள் நேரடி, தனிப்பட்ட வெளியீட்டு முறையிலேயே இடம்பெற்றுள்ளன.இவற்றில் எந்த வெளிப்படைத் தன்மையும் இருக்கவில்லை

என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நிதிச் சபையின் அனுமதி இதற்காக பெற்றுக் கொள்ளப்படவில்லை என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற திறைசேரி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளை நடத்த பாராளுமன்றம் அரச நிதிக் குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!