கிண்ணியா மக்கள் NFGG க்கு வழங்கும் அமோக ஆதரவு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் – கிண்ணியா நகர சபை வேட்பாளர் நாஸிக் மஜீத்

கிண்ணியாவில் NFGG க்கு வழங்கப்படும் அமோக ஆதரவு, இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நன்கு பிரதிபலிக்கும். கிண்ணியா நகர சபைக்கும்,கிண்ணியா பிரதேச சபைக்கும் பெருமளவிலான NFGG உறுப்பினர்கள் செல்வர் என்று கிண்ணியா நகர சபையில் போட்டியிடும் NFGG உறுப்பினர் நாஸிக் மஜீத் தெரிவித்தார்.

இன்று (09) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

 

தேசிய கட்சிகளதும், முஸ்லிம் கட்சிகளதும் பாரபட்சமான நடவடிக்கைகளாலும், ஊழல், மோசடிகளாலும் விரக்தியடைந்துள்ள கிண்ணியா மக்கள்,மக்களுக்கு விசுவாசமாக செயற்படுகின்ற ஒரு அரசியல் கட்சியின் பால் பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அந்த வகையில், தாம் ஆதரிப்பதற்கு மிகவும் பொருத்தமான கட்சியாக NFGG யை கிண்ணியா மக்கள் பார்க்கின்றனர்.

இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், நாம் மிகவும் உத்வேகத்துடன் பங்கேற்கின்றோம். கிண்ணியா நகர சபையிலும், பிரதேச சபையிலும் முதற் தடவையாகத்தான் நாம் போட்டியிடுகின்றபோதும், மக்கள் நமக்கு பெருமளவிலான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

 

இதற்கான காரணம் கடந்த காலங்களில் சமூக வேலைத்திட்டங்களில் மிகவும் உயிர்த்துடிப்புடன் செயற்பட்ட இளைஞர்கள் NFGG ஊடாக போட்டியிடுகின்றமையும், தன்னிடம் எந்தவொரு அதிகாரமும் இல்லாத நிலையிலும், NFGG மக்களுக்காகக் குரல் கொடுத்து செயற்படுகின்றமையுமாகும்.

 

இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மன்றங்களுக்குச் செல்லும் நமது உறுப்பினர்கள், பாரம்பரிய அரசியலிலிருந்து வித்தியாசப்பட்டு,மக்களுக்கு விசுவாசமாக செயற்படுவார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்களைக்கூட மக்கள் பணிக்காகவே பயன்படுத்துவார்கள்.

 

நாம் வெறுமனே தேர்தலில் போட்டியிட்டு பதவிகளைப் பெற வேண்டும் என்பதற்காகப் போட்டியிடுபவர்கள் அல்லர். நமது பிரதேசத்தில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பேரவாவே நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றது.

 

இப்போது மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர். தேர்தல் நெருங்கும்போது அமைக்கப்படும் பாதைகளைப் பார்த்து வாக்களிக்கும் நிலையிலிருந்து மக்கள் மீண்டுள்ளனர். எனவே, அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது. இதனால் பாதிக்கப்படப் போவது பாரம்பரிய அரசியல்வாதிகளே.

 

நாம் மக்களின் தேவைகளையும், அபிலாசைகளையும் சரியாகப் புரிந்து, அதற்கேற்றாற் போல் திட்டமிட்ட அபிவிருத்திகளையும், மேம்பாடுகளையும் செய்வோம். தேர்தல்கள் நெருங்கும்போது, மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை முற்றாகப் புறக்கணிக்கின்றோம்.

 

நமது கொள்கை கோட்பாடுகளையும், தூர நோக்கையும், முன்மாதிரிகளையும் மக்கள் புரியத் தொடங்கியுள்ளனர். இது நமது கட்சியின் கடந்த 11 வருட கால உழைப்பின் பிரதிபலனாகும். இந்த உழைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும் இதன் பெருமை சாரும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!