உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க ஐ.தே.க.வுக்கு ஒத்துழைப்பு: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதில் பிரதான கட்சிகள் அனைத்தும் சிக்கலை எதிர்நோக்கலாம். அவ்வாறான நிலைமை ஏற்படும்போது, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சபைகளில் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

யட்டிநுவர பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிடும் எம்.ஏ.எம். சிபரை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) தெஹியங்கையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

புதிய தேர்தல் முறையில் நடைபெறவுள்ள இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்தும், தனித்தும் போட்டியிடுகின்றது. தனித்துப் போட்டியிடுவதன் மூலம் சில பிரதேசங்களில் உருவாகியுள்ள அரசியல் நிலைமையை அடிப்படையாக வைத்து, சில ஆசனங்களை வெல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

யட்டிநுவர தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடந்தபோது, ஐ.தே.க. தொகுதி அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க விட்டுக்கொடுப்பை செய்ய தவறியதன் விளைவாகவே நாம் எங்களது மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்குத் தீர்மானித்தோம். ஆகையால், எங்களது கட்சிக்கு வாக்களிப்பதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப்போவதில்லை.

நீங்கள் உங்களது வாக்குகளால் என்னை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து அனுப்பியதன் பயனாகவே இங்கு பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். எமது கட்சியின் சார்பில் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை யட்டிநுவர பிரதேச சபைக்கு தெரிவுசெய்து அனுப்பினால், அவரூடாக மேலும் பல அபிவிருத்திகளை இந்த பிரதேசத்தில் மேற்கொள்வதற்கு என்னாலான முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இலங்கையின் பாரிய நீர் வழங்கல் திட்டங்களில் ஒன்றாக கண்டி வடக்கு நீர் வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 33,000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் 3 வருடங்களில் முடிவடையவுள்ளது. இதன்பயனாக பாத்ததும்பர, யட்டிநுவர, ஹாரிஸ்பத்துவ ஆகிய தேர்தல் தொகுதிகளில் வசிப்போருக்கு 4 இலட்சத்துக்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ள என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.நயீமுல்லாஹ், வேட்பாளர்களான எம்.ஏ.எம். சிபர், எம்.நலார் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டர்.

இதன்போது, யட்டிநுவர பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா கொடித்துவக்குவை ஆதரித்து தொலுவ கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திலும் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!