தனிநபர் விமர்சன அரசியலை புறக்கணிக்கிறோம்! புத்தளத்தின் மேம்பாட்டுக்கான இலக்குகளுடன் செயற்படுகிறோம்! -NFGG யின் புத்தளம் நகர சபை வேட்பாளர் நூருல் அமீன்

(அஷ்கர் தஸ்லீம்)
நாம் புத்தளத்துக்கான நிலைத்து நிற்கும் இலக்குகளுடன் செயற்படுகின்றோம். புத்தளத்தின் சுகாதாரம்,கல்வி, பொருளாதாரம், உட்கட்டமைப்பு என்று அனைத்துத் துறைசார் இலக்குகளும், திட்டங்களுமே நமது அரசியலின் மைய பொருளாக இருக்கின்றன என்று NFGG யின் (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) புத்தளம் நகர சபை வேட்பாளரும், முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினருமான நூருல் அமீன் தெரிவித்தார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தளத்தின் பாரம்பரிய அரசியலிலிருந்து நாம் தனித்துவம் பெற்று விளங்குவதற்கான பிரதான காரணம், நம்மிடம் உள்ள தூர நோக்கமும், சமூகம் சார் திட்டங்களுமேயாகும்.
கடந்த காலங்களில் புத்தளத்திலிருந்து டெங்கு நோயை இல்லாதொழிக்கும் மாபெரும் பணியை நாம் வெற்றிகரமாக முன்னெடுத்தோம். பாரம்பரிய அரசியல்வாதிகள் இதில் கவனமற்று இருந்த நிலையில், நாம் இதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம் என்பது திருப்தியளிக்கின்றது.
பாரம்பரிய அரசியல்வாதிகள் ஏனைய கட்சிகளையும், வேட்பாளர்களையும் விமர்சித்த வண்ணம், தனிநபர் நலன்களுக்காகவே செயற்படுகின்றனர். இந்த மோசமான அரசியல் கலாசாரத்தை புறக்கணித்து, முன்மாதிரி மிக்க அரசியலை நாம் செய்கின்றோம்.
இப்படியான பாரம்பரிய அரசியல்வாதிகளிடம் புத்தளத்தை மேம்படுத்துவதற்கான முறையான திட்டங்கள் இல்லை. ஆனால், நம்மிடமுள்ள பல்வேறு துறைசார் உறுப்பினர்கள் புத்தளத்தை கல்வி, பொருளாதார, சுகாதார ரீதியாக மேம்படுத்துவதற்கான திட்டங்களுடன் நீண்ட காலமாக செயற்பட்டு வருகின்றனர்.
எனவே, புத்தளத்தில் பல துறைகளிலும் உண்மையான அபிவிருத்தியையும், மேம்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு புத்தள மக்கள் NFGG இன் இரட்டைகொடிக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்குள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!