நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை மக்களிடம் கையளிக்க நடவடிக்கை – அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்

(பைஷல் இஸ்மாயில், துஷாரா)

சவுதி அரசாங்கத்தின் நிதியுதவியில் அம்பாறை – நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்திப் இன்று (19) தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

இந்த வீடுகளை பெறத் தகுதியானவர்களை இனம்காணும் நோக்கில் மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைமையில் அதுதொடர்பான அதிகாரிகளைக் கொண்டு நேர்முகப்பரீட்சைகளை நடாத்தி அதில் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு இந்த வீடுகளை மிக விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

இதற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் மாதம் முதலாம் வாரமளவில் இடம்பெறவுள்ளதாகவும், அவர்களை இனங்காணும் நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. அவ்வீடுகளை கையளிப்பதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், வீடுகள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தாருக்கு மாத்திரம் வழங்கப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைவாக, உயர் நீதிமன்றம்  மூன்று இனத்தாருக்கும் விகிதாசார ரீதியாகப் பகிர்ந்தளிக்கும்படி தீர்ப்பு வழங்கி இற்றைக்கு 8 வருடங்கள் கடந்துள்ளன. இந்த வீடுகள் யாவும் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

எனினும், பகிர்ந்தளிப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கால தாமதத்தினால் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் யாவும் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்தும், வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையிலுள்ள வீடுகளை திருத்தம் செய்து அந்த வீடுகளை  மூன்று இனத்தாருக்கும் விகிதாசார ரீதியாகப் பகிர்ந்து மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.லத்திப் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!