மகிந்தவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் அரசாங்கத்தைக் குழப்பும் சதி முயற்சி

(பைஷல் இஸ்மாயில், துஷாரா)

எப்போதெல்லாம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அம்முயற்சிகளைக் குழப்புவதற்கான சர்ச்சைக்குரிய விடயமாகத் தூக்கிப் பிடிக்கப்படுவது வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற விடயமே! என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லீம் காங்கிரசின் இளைஞர் விவகார செயலாளருமான ஏ.எல் தவம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் நேற்றிரவு(09) இடம்பெற்ற கல்வியலாளர்களுடனான சமகால அரசியல் தொடர்பிலான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும்  அவர் கூறுகையில்,

2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் இவ்வாறுதான் வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற விடயம் தூக்கிப் பிடிக்கப்பட்டது. அன்று அவ்விடயத்தை பிராந்திய வல்லரசின் ஏஜெண்டுகளாக சிலர் செயற்பட்டார்கள். அதே ஏஜெண்டுகள் இன்று மகிந்தவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் அரசாங்கத்தைக் குழப்பி மீண்டும் ஆட்சி அதிகாரத்தைத் தம் வசப்படுத்திக்கொள்ளும் நிகழ்ச்சி நிரலில் தற்போது ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கிய விடயத்தில் உக்கிர கோபத்தில் இருக்கும் பிராந்திய வல்லரசு, இலங்கையின் அரசியலைக் குழப்பி, தீர்வு முயற்சிகளில் தடைகளை ஏற்படுத்தி, அரசின் ஸ்தீரத்தன்மையை இல்லாமல் செய்யக் களமிறங்கியுள்ளது. அதற்கு வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிய விடங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டு இதற்குப் பிறகு ஒரே மாகாணமாக நிரந்தரமாக அமைய வேண்டுமாயின், அதற்கு பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதோடு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டிய தேவையும் சட்ட  ரீதியிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான இணைப்புக்கு ஆதரவு வழங்கினால் நாட்டைப் பிரிக்க உதவிய துரோகிகளாகத் தாம் சித்தரிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் அரசாங்கத்திலுள்ள சிங்கள எம்.பீக்கள் யாரும் ஆதரவு வழங்க மாட்டார்கள். அதுமாத்திரமன்றி, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்கின்ற நிலையில் இவ்விணைப்பு என்கின்ற விடயம் படுதோல்வி அடைந்துவிடும்.

தற்போதும் சாத்தியமே இல்லாத இவ்விடயம் அரசியல் லாபத்திற்காகத் தூக்கிப் பிடிக்கப்படுவதை நாம் இன்று அவதானிக்க முடிகின்றது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!