“மண்ணெல்லாம் மரத்தின் வேர்களால் மகோன்னதமடைந்து அபிவிருத்தி”; மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு

(எம்.சி. அன்சார்)

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் ஏற்பாட்டில் மண்ணெல்லாம் மரத்தின் வேர்களால் மகோன்னதமடைந்து அபிவிருத்தியால் மாண்புற்றுக்கொண்டிருக்கும் கல்முனை, சாய்ந்தமருது, இஸ்லாமபாத், நற்பிட்டிமுனை,பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வுகள் மிக கோலாகலமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) காலை 10 மணி முதல் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசின் அழைப்பின்பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமானி றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம். அப்துல் றசாக், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், ஐ.எல்.எம். மாஹிர், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டமுதுமானி நிசாம் காரியப்பர், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீட் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வுகளின்போது மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டடம், மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டடம், சேனைக்குடியிருப்பு சனசமூக சிகிச்சை நிலையம், இஸ்லாமபாத் சனசமூக சிகிச்சை நிலையம், சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கான கட்டடம், கல்முனை ஆயுர்வேத வைத்தியாலை என்பன திறந்து வைக்கப்படவுள்ளன.

இவ்வாறு பல்வேறு அபிவிருத்திகளை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் இந்நிகழ்வுகள் கம்முனைத் தொகுதியினை அலங்கரிக்கும் இத்தறுணத்தில் கல்முனை றோயல் வித்தியாலயத்தின் நீண்ட நாள் குறைபாடாகவிருந்த வகுப்பறைப் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு ஏதுவாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் முயற்சியினால் அப்பாடசாலையில் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

கல்முனைத் தொகுதியின் மண்ணெல்லாம் அபிவிருத்தியால் மாண்புறும் இந்நன்நாளில் மிகப் பிரமாண்டமான பொதுக் கூட்டம் கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக மாலை 4 மணியளவில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!