அமைச்சர் ஹிஸ்புல்லாவை விமர்சிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது – மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

(மட்டக்களப்பு – துஷாரா)

மட்டக்களப்பு மாவட்டத்திலே எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத பல்வேறு அபிவிருத்திப் பணிகளைச் செய்துகாட்டி வரலாற்று சாதனைகளை நிலைநாட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை விமர்சிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தச் சட்டமூம் கொண்டுவரப்பட்ட போது நாங்கள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களை தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றோம். அப்போது இந்தச் சட்டமூலம் ஜனநாயகத்திற்கு விரோதமானது. கிழக்கு மாகாண மக்கள் 5 வருடங்களுக்கு வழங்கிய ஆணையை திருட்டுத்தனமாக நீடிக்க முடியாது. இதனை எதிர்த்தே ஆகவேண்டும் என அவர் ஆலோசனைகளை வழங்கினார்.

20வது திருத்தச் சட்டமூலம் எமது நாட்டிலே இன்று ஒரு சர்ச்சையாக மாறியிருக்கிறது. இச்சட்டமூலத்தினை கிழக்கு மாகாண சபையில் கொண்டு வந்தபோது நாங்கள் பகிரங்கமாகவே எதிர்த்தோம். இதனை எப்படியோ நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக விசேட அமர்வுகள் எனும் போர்வையில் கிழக்கு மாகாண சபை பல தடவைகள் கூட்டப்பட்டு பின்கதவால் பேர்ச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இருந்தாலும் இறுதிநேரத்தில் இச்சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது திருத்தமின்றி பிழையான முறையில் இதனை சமர்ப்பித்து எமது சமூகத்துக்கு வரலாற்று துரோகத்தினை செய்ய வேண்டாமென கோரிக்கை விடுத்தோம்.

அவைகளை செவிசாய்க்காது முதலமைச்சரும், ஆளுங்கட்சியினரும் அச்சட்டமூலத்தினை நிறைவேற்றி தங்களது பதவிகளை நீடித்துக்கொள்வதில் மிக ஆர்வமாக இருந்தார்கள்.

அன்றைய மாகாண சபை அமர்வின்போது பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இந்தச்சந்தர்ப்பத்திலே அச்சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு திருட்டுத்தனமாக நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர்காளான நாங்கள் குழப்பம் விளைவித்ததாகவும், அரச உயர்மட்டத்தில் காட்டிக்கொடுக்கப்பட்டது. இறுதியில் காட்டிக்கொடுத்தவர்கள் வெட்கித் தலைகுனிகின்ற நிலைமைகள் உருவாகியுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சமூக நலனை கருத்திற்கொள்ளாது ரணில் விக்ரமசிங்கவின் நல்லாசியை பெற்றுக்கொள்வதற்காகவும், நல்லாட்சியின் அரவணைப்பினை பெற்றுக்கொள்வதற்காகவும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களை பிழையாக வழிநடாத்தி பின்கதவால் இச்சட்டமூலத்தினை நிறைவேற்றியிருக்கிறார் என்பதுதான் வெளிப்படையான உண்மையாகும். இது ஜனநாயகத்திற்கு விரோதமான ஒரு செயற்பாடாகும்.

இந்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையிலே நிறைவேற்றப்பட்டவுடன் வட மாகாண முதலமைச்சர் சில கருத்துக்களை வெளியிட்டார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் புரிந்து கொள்ளாமையினாலே 20வது திருத்தச்சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கினர் என்றார். அவர் அதனை பகிரங்கமாக ஊடகங்களில் தெரிவித்ததனை நாங்கள் அவதானித்தோம். இந்த சம்பவம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது.

ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் 20வது திருத்தச் சட்டமூலத்தினை முறையாக சமர்ப்பிக்காது திருத்தங்கள் எனும் போர்வையில் வெற்றுப் பேப்பர்களை காட்டி அதனைக்கூட எங்களது கண்களில் காட்டாது மாகாண சபையின் நிலையியல் கட்டளைச்சட்டத்திற்கு முரணாக கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டவர்களின் பூரண சம்மதத்துடன் நிறைவேற்றிய அந்த துரோகமான சம்பவத்தினை சகலரும் அறிந்திருப்பீர்கள்.

குறிப்பாக இந்த மண்ணிலே பிறந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்தவிடயத்தில் மோசமாக நடந்துகொண்டு இந்த சட்டமூலத்தை நிறைவேற்றி பெரும் வரலாற்று துரோகத்தினை செய்துள்ளார். இதனை ஒருபோதும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மட்டுமல்ல இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் மறந்துவிட மாட்டார்கள்.

பதவி மோகம் கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் நல்லாட்சி அரசாங்கத்தை திருப்திபடுத்தி அங்கிருந்து நல்லாசிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அதனூடாக ஒரு வருடம் தனது அரசியலை நீடித்துக்கொள்வதற்கும் 20வது சட்டமூலத்தினை கள்ளத்தனமாக நிறைவேற்றியிருப்பது மிகக்கேவலமானதொரு விடயமாகும்.

20வது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றி எமது சமூகத்திற்கு துரோமிழைத்து கிழக்கு மாகாண சபையை பிழையாக வழிநடாத்திய அந்த முதலமைச்சருக்கு எதிர்வரும் காங்களில் சகலரும் தக்கபாடம் புகட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!