ரோஹிங்கிய பிரச்சினையை வைத்து பௌத்த – முஸ்லிம் மோதலை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி முஸ்லிம்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை

 

இலங்கை ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிலருக்கு அடைக்கலம் வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக சில சக்திகள் போலிப் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. ஸ்ரீலங்கா ஐக்கிய முஸ்லிம் சங்கம் என்ற பெயரில் சில தினங்களுக்கு முன் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இலங்கை அரசுக்கு இதற்காக பாராட்டுத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

மக்களைத் தவறாக வழி நடத்தல், பௌத்த மற்றும் முஸ்லிம் மக்களிடையே கருத்து மோதல்களை ஏற்படுத்தும் நோக்கிலே இந்த ஊடக அறிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம் என முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அமைப்பின் கடிதத் தலைப்பில் தமிழ், அறபு எழுத்துக்கள் பிழையாக உள்ளன. இந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் பாவனையில் இல்லாத ஓர் இலக்கமாகும். குறிப்பிட்டுள்ள முகவரியும் பிழையானது. இதேநேரம் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஊடக அறிக்கை எந்த ஓர் ஊடக நிறுவனத்திற்கும் அனுப்பப்பட்டதாக இல்லை.

முக நூல்களில் வெளியாகியுள்ள இத் தகவல் முற்றிலும் பிழையானது. இலங்கையில் ரோஹிங்கியர்கள் எவருக்கும் புகலிடம் அளிக்கப்படாத நிலையிலே விசமத்தனமான நோக்கில் இப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கைக்கு வந்துள்ள ரோஹிங்கியர்கள் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது. முதன் முறையாக 2013இல் 138 ரோஹிங்கியர்கள் இலங்கைக்கு வந்தனர். இவர்ககளில் 04 பேரைத் தவிர எவருக்கும் அகதி அந்தஸ்து கிடைக்கவில்லை.

இதன் பிறகு கடந்த ஏப்ரலில்  30 பேர் கொண்ட வள்ளம் ஒன்று யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டது. இவர்கள். ஐ.நா. அகதிகள் நிவாரணம் நிலையம் மற்றும் பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் மட்டுமே அகதி அந்தஸ்து கோரியிருப்பதாக குடி வரவு – குடியகல்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. 1951ஆம் ஆண்டு அகதிகள் தொடர்பான உடன்படிக்கையின் படி அகதிகளைப் பொறுப்பேற்கும் நாடாக இல்லை.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பாகப் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் பௌத்த – முஸ்லிம்களிடையே பிரச்சினைகளை உருவாக்குவதற்கு சில கடும் போக்குச் சக்திகள் முயற்சி செய்து கொண்டு வருவதனால் முஸ்லிம்கள் விழிப்போடு நடந்து கொள்ளுமாறு முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!