கல்முனையின் நிலத்துண்டாடல் குறித்த விழிப்பூட்டலும், கல்முனை மக்களின் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றலும்

(கல்முனையூர் அப்ராஸ்)

கல்முனையின் எதிர்கால அதிகார அலகுகள் மற்றும் சமகால கல்முனையின் நிலத்துண்டாடல் குறித்து கல்முனை மக்களை விழிப்புணர்வூட்டும் விஷேட நிகழ்வு கல்முனையன்ஸ் போராமின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (15-09-2017) கமு அல்-பஹ்ரியா மகா வித்தியாலத்தில் இடம்பெற்றது.

விழிப்பூட்டல் நிகழ்வில் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பள்ளிவாசல் நிருவாகத்தினர், சிவில் சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் என சுமார் 200 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேற்படி நிகழ்வில் சமகால கல்முனை எதிர்நோக்குகின்ற சவால்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு கல்முனை மக்கள் சார்பாக ஆறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து கல்முனையன்ஸ் போரம் வெளியிட்ட ஊடக அறிக்கை வருமாறு;

கல்முனை மாநகரமானது எமது மூதாதையர்களினது அயராத முயற்சியினாலும், அவர்களது தியாகத்தினாலும் உருவாக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் முக்கிய நகரமாகும். அது மட்டுமல்ல தமிழ் பிரிவினைவாதம் பயங்கரவாதமாக மாற்றம் பெற்று எமது உயிர்களையும், உடைமைகளையும் காவுகொண்டபோது அந்த அடக்குமுறையையும், அராஜகத்தையும் வீரியமாக எதிர்த்து நின்றதோடு மட்டுமல்லாமல் உடன்பிறப்புக்களான அயல் கிராம முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் எமதூர் இளைஞர்கள் இராப்பகலாக பாடுபட்டதும் வரலாறு. அந்தக்காலப் பகுதிகளில் எமது கௌரவ முன்னாள் அரசியல்வாதிகளின் முயற்சியால் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதே பலம் என்ற அடிப்படையில் அயலிலுள்ள கிராம சபைகளையும் கல்முனை பட்டின சபையோடு சேர்த்து கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதேச சபையினைக்கொண்டு செல்லவும், ஏனைய கிராமங்களுக்கு சேவை வழங்கவும் கல்முனைப் பட்டினத்தின் வருமானங்கள் செலவிடப்பட்டன. பிற்காலங்களில் வந்த அரசியல் தலைமைகளும் இணைந்த இந்த உள்ளூராட்சி மன்றத்தின் அபிவிருத்தியையும், ஸ்திரத்தன்மையையும் கருதி அதனை நகர சபையாகவும், பின்பு மாநகர சபையாகவும் தரம் உயர்த்தினார்கள்.

இது இவ்வாறிருக்கையில் இலங்கை அரசின் நிருவாகக் கட்டமைப்பில் பிரதேச செயலகங்கள் என்னும் புதிய நிர்வாக அலகும், அதிகாரங்களும் வழங்கப்பட்டு நாடுதோறும் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டது . இவ்வாறாக உருவாக்கப்பட்ட கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து பலவந்தமான முறையில் ஆயுததாரிகளால் தமிழ் பிரதேச செயலகம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதற்கு அன்று முதல் இன்று வரை அம்பாறையிலுள்ள சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளும், அவர்களின் கைக்கூலிகளாகச் செயற்பட்ட உத்தியோகத்தர்களும் துணை நின்றது இன்று வரை இவ்வாறான சட்டபூர்வமற்ற ஒரு அலுவலகம் இயங்கக் காரணமாகும் . காலத்துக்குக் காலம் இந்த உப அலுவலகத்தை தரமுயர்த்துதல் என்ற தோரணையில் தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிகள் எடுப்பதுவும் அது பிற்போடப்படுவதும் இடம்பெற்றுவருகின்றது.

மிக அண்மைக்காலமாக எமது உடன்பிறப்புக்களான சாய்ந்தமருது மக்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசத்தை ஒரு உள்ளூராட்சி மன்றாகப் பிரித்துக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர் .அது மட்டுமல்லாமல் அவர்களிம் கோரிக்கையை நிறைவேற்றித்தருவதாக தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ,அவர் சார்ந்த கட்சி தலைவர் , உள்ளூராட்சி அமைச்சர் ,பிரதமர் போன்றவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

அண்மையில் இந்த விடயமாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்படவுள்ளதாக கௌரவ பிரதியமைச்சர் எச்.எம். எம் ஹரீஸ் அவர்களால் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் வைத்து வாக்குறுதி வழங்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தது . இதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது சம்பந்தமாக பொது நிருவாக சேவைகள் அமைச்சரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கு குறித்த அமைச்சர் இணங்கியுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இக்கட்டான இந்த சூழ்நிலையில் பாரம்பரியமாக முஸ்லிம்களின் கேந்திர நிலையமான கல்முனை நகரத்தை நாம் இழந்துவிடுவோமா என்ற அச்சம் எம் எல்லோர் உள்ளத்திலும் எழுந்துள்ளது.
இந்தக் கவலையுடனும், எமது எல்லைகளை பாதுகாக்க வேண்டிய சமூகப்பொறுப்பை சுமந்த நிலையிலும் ஒன்றுசேர்ந்த சிலரின் முயற்சியால் அரசியல் தலைமைகளைச் சந்தித்து எமது தரப்பு நியாயங்கள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக கல்முனைக்கு நேரடியாக வருகை தந்து உரிய மக்கள் பிரதிநிதிகளுடனும், சிவில் அமைப்புகளுடனும், ஏனைய ஊர்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி எல்லோருக்குமான நியாயமான தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் உள்ளூராட்சி அமைச்சரினால் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த விடயங்களின் அடிப்படையிலும் 15.09.2017 ஆகிய இன்று கல்முனை பிரதேசம் சார்ந்த பள்ளிவாசல்கள், சிவில் அமைப்புக்கள் புத்திஜீவிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையிலும் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே இம்முன்மொழிவுகளை அமுல்படுத்த அனைவரையும் ஒத்துழைக்குமாறு கல்முனையன்ஸ் போரம் கல்முனை மக்கள் சார்பாக சம்பந்தப்பட்டவர்களை வினையமாக வேண்டிக்கொள்கிறது.

1.0  கல்முனை  மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதிற்க்கான  உள்ளூராட்சி மன்றத்தை  உருவாக்கும் போது  1897 ஆமாண்டிலிருந்து வழக்கிலிருந்த கல்முனை பட்டின சபை எல்லைகளைக் கொண்ட கல்முனை மாநகரசபை உருவாக்கப்படல் வேண்டும்.

2.0  சட்டவிரோதமான நிலையில் இயங்கிவரும் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு அது கல்முனை பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்.

3.0 கல்முனை பட்டின சபை எல்லைகளைக் கொண்ட நிலத்தொடர்பான நிருவாக அலகான கல்முனைப் பிரதேச செயலகம் உருவாக்கப்படுவதோடு  ஏனைய ஊர்களுக்கு பொருத்தமான எல்லைகளைக் கொண்ட பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

4.0 புதிதாக உருவாக்கப்படும் இப்பிரதேச செயலகங்களுக்கான கி.சே.பிரிவுகள் சனத்தொகை அடிப்படையில் நியாயமான முறையில் உருவாக்கப்படல் வேண்டும். இதன்போது இக்கிராம சேவையாளர் பிரிவுகளின் எல்லைகள் மீள வரையறுக்கப்படல் வேண்டும்.

5.0 மேற்படி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மக்களைச் சென்றடைவதற்க்கான துண்டுப்பிரசுரங்கள், ஊடக அறிக்கைகள் வெளியிடப்படல் வேண்டும்.

6.0 இந்த செயற்பாடுகளை முன்கொண்டுசெல்லவும் , ஊருக்கான சிவில் அமைப்புகளின் குடை அமைப்பை ஏற்படுத்தவும் முயற்சிகள் உடனடியாக எடுக்கப்படல் வேண்டும்.

ஆகியன சபையோரால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாகும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!