கடமைகளை மிக விரைவாக பாரமெடுத்து சுகாதாரத்துறை வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் – அமைச்சர் நஸீர்

(மட்டக்களப்பு – துஷாரா)
கிழக்கு மாகாண சுகாதாரத்துறையின் வளர்ச்சிக்காக பாரிய அபிவிருத்திப் பணிகளைச் செய்து வருகின்றோம். அதற்காக பலகோடி நிதிகளை ஒதுக்கீடு செய்து அதன் மூலம் பாரிய வெற்றிகளையும் கண்டுள்ளோம். என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் கூறினார்.

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்றிய 38 பேருக்கு பதவி உயர்வு நியமனங்களை நேற்று (13) மாகாண பணிப்பாளர் காரியாலயத்தில் வைத்து வழங்கிய பின்னர் அங்கு உரையாற்றும்போது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
எமது மாகாணத்தின் சுகாதார வளர்ச்சியை மேம்படுத்த கட்டிடங்களைக் கொண்டோ அல்லது தளபாடங்களைக் கொண்டோ இதனை முன்னெற்ற முடியாது. இந்த முன்னெற்றத்துக்கு உங்களின் பங்கு மிக அத்தியவசியமானது அதற்காக நீங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். உங்களின் ஒரு அர்ப்பணிப்பின் ஒரு பாகம்தான் இந்த பதவி முன்னெற்றத்துக்கு காரணமாக அமைந்ததுள்ளன. அந்த வகையில் நீங்கள் பரீட்சையில் சித்தியடைந்து, பயிற்சியையும் பெற்றுக்கொண்டு இன்று உங்களின் பதவி உயர்வை பெற்றுள்ளீர்கள்.
அதுமாத்திரமல்லாமல், மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் தரவுகளை கவனத்திற்கொண்டே இந்த நியமனங்கள் யாவும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலங்கள் போன்றவற்றில் காணப்படும் வெற்றிடங்களுக்கே நீங்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளீர்கள். இதில் எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இடம்பெறவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
இன்று நியமனங்களைப் பெற்றவர்கள் தங்களது கடமைகளை மிக விரைவாக பாரமெடுத்து எமது மாகாண சுகாதாரத்துறை வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும், அதற்கமைவாக நீங்கள் செயற்படுவீர்கள் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!