சம்மாந்துறை மாணவி பற்றிய இணையத்தள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது: ஜம்இய்யதுல் உலமா கண்டனம்

(எம்.சி. அன்சார்)
சம்மாந்துறைப் பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை (11) உயர்தர பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவி ஒருவர் தனது ஹபாயாக்குள் புளூடூத் ஹெட் செட் கருவியை வைத்து பரீட்சை எழுதிய நிலையில் பொலிஸாரின் உதவியுடன் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டார் என்று இணையத் தளங்களில் கடந்த திங்கட்கிழமை(14) வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும் என சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் மஜ்லிஸ் அஷ்ஷூறா ஆகியன இணைந்து விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
சம்மாந்துறை வலயத்தில் மொத்தமாக 13 பரீட்சை நிலையங்களில் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேற்படி நிலைய மேற்பார்வையாளர்களிடமும், இணைப்பாளர்களிடமும் இச்செய்தி பற்றி கேட்டபோது அவ்வாறானதொரு நிகழ்வு நடைபெறவில்லை என்பதனை உறுதியுடன் தெரிவிக்கின்றனர். மேலும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பரீட்சைக்கு பொறுப்பான பிராந்திய மேற்பார்வையாளர்கள் ஆகியோரிடமும் இது பற்றி வினாவிய போது இவ்விடயம் சம்பந்தமாக எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்பதனை தெளிவாக தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறையின் கல்வி வளர்சியினை ஏற்றக் கொள்ள முடியாத காழ்ப்புணர்சி கொண்டவர்களும், முஸ்லிம் சமூகத்தை இழி நிலைப்படுத்த வேண்டும் என்று கங்கனம் கட்டும் சதி காறர்களினதும் முயற்சியே இந்த செய்தியாகும்.
இது சம்பந்தமாக ஆராயும் கூட்டமொன்று சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் இஸ்லாமிய செயலகத்தில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எம்.கே.எம். முஸ்தபா தலைமையில் நேற்று (15) இடம்பெற்றது.
ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.சி. அப்துல் காதர், மஜ்லிஸ் அஷ்ஷூறாவின் தவிசாளர் ஐ.ஏ.ஜப்பார், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், அதிபர்கள், பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்கள்.
இவ்வாறான எவ்விதமான உண்மைத்தண்மையும் இல்லாத பொறுப்புணர்ச்சியற்ற செய்தியினை வெளியிட்ட இணையதளங்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் வன்மையான கண்டனத்தையும், எதிர்ப்பினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்வாறான போலியான செய்திகள் எமது மாணவர்களின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கப்படுவதுடன், முஸ்லீம் சமூகத்தையும், கலாசாரத்தினையும், முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயாவையினையும் இழி நிலைப்படுத்த வேண்டும் என்று கங்கனம் கட்டும் சதி காறர்களினதும் முயற்சியே இந்த செய்தியாகும்.
இந்த விடயம் தொடர்பாக சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம், சம்மாந்துறை பொலிஸ் நிலையம் என்பன இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெறவில்லை என்று ஊர்ஜிதப்படுத்தும் நிலையில் இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்கு படுத்தும் ஆணையத்திடம் முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!