அதிபர் அமானுல்லாஹ் மறைவு  கல்விச் சமூகத்துக்கு இழப்பு   – முன்னாள் அமைச்சர் அஸ்வர்

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த என்.ஏ. அமானுல்லாஹ்வின் மறைவு மன்னார் மாவட்டத்திற்கு மாத்திரமல்ல, கற்றோர்கள் மத்தியில் அனைவருக்கும் ஏற்பட்ட ஓர் இழப்பாகும் என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இவரை நான் சுமார் 40 ஆண்டு காலமாக நன்கறிவேன். அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் உதயமாகிய போது, அன்று தாரா குண்டு என்னும் பிரதேசத்திலிருந்து வந்த சேஹ் தாவூத்தோடு இவர் முஸ்லிம் கல்வி மாநாட்டின் பல கூட்டங்களில் கலந்து கொண்டது மாத்திரமல்ல, கல்வி சம்பந்தமான பல ஆழ்ந்த கருத்துக்களை காலத்திற்குக் காலம் வெளியிட்டவராவார்.

பிரபலமான புலவர் குடும்பத்தைச் சேர்ந்த இவரிடத்தில் புலமைத்துவம் நிறைந்து காணப்பட்டது.

கொழும்பு பாடசாலைகளிலும் பல்துறை ஆசானாகவும் அதிபராகவும் நற்சேவை புரிந்த கால கட்டத்திலும்  நாம் இருவரும் மிகவும் முஹப்பத் கொண்டிருந்தோம் என்பதையும் நான் இங்கு மீள் நினைவூட்டிப் பார்க்கிறேன்.

எனவே ஆலிம்களுடைய மறைவு அகிலத்தின் மறைவு போன்று,  அறிஞர்களுடைய மறைவு நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

அன்று மன்னாரிலிருந்து புலிகளால் துரத்தப்பட்டு கற்பிட்டி கடலோரத்துக்கு மன்னார் மாவட்டத்திலிருந்து 22,000 மக்கள் வந்த போது, இவரும் அதில் ஒருவராக இருந்தார். அன்று புத்தளம் தொகுதிக்கு பொறுப்பான உறுப்பினர் என்ற முறையிலே இவருக்கும் இவர் சார்ந்த குடும்பங்களுக்கும் ஏனையோருக்கும் என்னால் பல உதவிகளை வழங்க முடிந்தது. இவர், அமைச்சர் றிஷாத் பதியுதீனுடைய மாமனாரும் ஆவார்.

இவர் உம்முகுல்தூம் என்பவரை கரம் பிடித்து 4 பிள்ளைகளுக்கு தந்தையாக விளங்கினார்.

இவருடைய மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற இந்தப் புனித ரமழான் மாதத்தில் துஆச் செய்கிறேன்.என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!