நிந்தவூர் வாராந்த பொது சந்தையில் இடைத்தரகர்களின் அட்டகாசம் ! மக்கள் விசனம் !

(சுலைமான் றாபி)
நிந்தவூர் பிரதேசபையின் ஏற்பாட்டில் நிந்தவூர் பொதுச் சந்தையில் வாரத்தில் ஒருநாள் செவ்வாய்க்கிழமை மாபெரும் மலிவு விற்பனைச் சந்தை (“பொல”) ஆரம்பிக்கபட்டுள்ளது. கடந்த 07 ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இச்சந்தையானது நான்காவது வாரமாகவும் தொடர்ச்சியாக இயங்கி வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சி அலையினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்தையில்  அன்றாடத் தேவைக்கான உலர் உணவு பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை ஊரிற்குள் மேற்படி பொருட்களுக்கான விலைகள் அதிகமாகியுள்ள போதும், வாரத்தில் ஒருநாளாவது இது போன்ற சந்தைகள் (“பொல”) அமைந்தமையானது  வரவேற்கத்தக்கதாகும்.
இது இவ்வாறு இருக்க இந்த ஒருநாள் மலிவுச் சந்தையில் சந்தை இடைத்தரகர்கள் முந்திய வாரங்களை விட  அதிகரித்தே காணப்படுவதோடு, மலிவுச் சந்தைக்கு பொருட்களை கொண்டுவந்து மலிவு விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளிடமிருந்து  மலிவு விலை பொருட்களை அவர்கள் விருப்பத்திற்கு விலை அதிகரித்து விற்பனை செய்துகொடுப்பதை  அவதானிக்க முடிந்தது. இதன் மூலம் மக்களுக்கும், வியாபாரிகளுக்குமிடத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதையும் நேரில் காணமுடிந்தது.
இது தவிர ஒரே வகையான பொருட்கள் பல வியாபாரிகளிடம் வித்தியாசமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதோடு, அங்கு இடைத்தரகர்கள் நின்று வியாபாரம் செய்யும் இடத்தில் விலை கூடுதலாக கூறப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.
இதுபோன்ற வியாபாரம் தொடருமானால் எதற்கு இப்படியொரு மலிவுச் சந்தை (“பொல”) என்று மக்கள் விசனமடைந்துள்ளதோடு, குறிப்பிட்ட இடைத்தரகர்கள் விடயத்தில் நிந்தவூர் பிரதேச சபையானது தகுந்த நடவடிக்கையினை எடுக்குமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!