கடும் மழையுடனான காலநிலை: களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக, நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது

கடும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன. அத்துடன் களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக, நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தாழ்நிலப் பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதேநேரம், மழை காரணமாக காலி, மாத்தறை, ரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில், பாதுக்க பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மட்டக்களப்பில் கடும் காற்றினால் பழுகாமம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அதிக மழையின் காரணமாக தெனியாய பகுதியில் 40க்கும் அதிகமான வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் போகொட தொழிற்சலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தற்போது நீரில் மூழ்கியுள்ள பிரதேசங்களில் இருந்து பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளில் கடற்படையினரும், விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிங்கங்கை பெருக்கெடுப்பால், காலி மாவட்டத்தின் நெலுவ, ஹபரகட மற்றம் மொரவக்க ஆகிய பகுதிகளும், யக்கலமுல்ல, அமதுவ, வல்பொல, நவலம, தவலகம போன்ற பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
களு கங்கை பெருக்கெடுப்பினால் களுத்துறை மாவட்டத்தின், பாலிந்த நுவர, புலத்சிங்கள, அகலவத்தை போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபடியாக இரத்தினபுரி மாவட்டத்தில் 196.7 மில்லி மீற்றர் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!