இரத்தம் சிந்தாது சுதந்திரமடைந்த நாடு 30 வருடங்களாக இரத்தம் சிந்தியது – இரத்தம் சிந்தாது சுதந்திரமடைந்த நாடு 30 வருடங்களாக இரத்தம் சிந்தியது.

(ஆதில் அலி சப்ரி)
இலங்கை முஸ்லிம்களுக்கு நடக்கும் அனைத்து அநீதிகளையும் தமக்கு நடக்கும் அநீதிகளாகக் கருதி, முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க இறுதிவரை முன்னிற்பதாக மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் விக்டர் ஐவன் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கெதிராக கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை கண்டித்து நேற்று தேசிய நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
எந்தவொரு அரசியல் கட்சி பதவியில் இருந்தாலும் சிறுபான்மையினரின் உறுமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் முன்பிருந்த அரசைப் போன்றே இந்த அரசாங்கமும் இவ்விடயத்தில் தவறிவிடுகின்றதா? என்ற கேள்வி எழுவதாகவும்  அவர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,
இன்று சிறிய, பெரிய அளவில் முஸ்லிம் பள்ளிவாசல்கள், வியாபார தலங்கள் தாக்கப்படுகின்றமை 1983 கருப்பு ஜூலையை நினைவுக்கு கொண்டுவருகின்றது. அது தமிழர்களை மாத்திரம் பாதிக்கவில்லை. முழு இலங்கையையும் பாதித்தது. இலங்கை தேவைக்கதிகமாகவே இரத்தம் சிந்தியுள்ள நாடு. இரத்தம் சிந்தாது சுதந்திரமடைந்த நாடு 30 வருடங்களாக இரத்தம் சிந்தியது. இனியும் இரத்தம் சிந்தவேண்டிய அவசியமில்லை.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் சீர்திருத்தப் பணிகள் நடைபெறவில்லை. எனவே, யுத்தம் முடிந்து 10 வருடங்களாகின்றபோது மீண்டுமொரு யுத்தத்தை தோற்றுவிக்கும் பாதைக்கு நாடு செல்கின்றது. தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி தேசிய இனமாக செயற்படவேண்டும்.
தமிழர்களுக்கு பாடம் போதித்தோம், முஸ்லிம்களுக்கும் பாடம் புகட்டுவோம் என்ற சிந்தனையில் சிலர் இருக்கின்றனர். பாடம் போதிக்கச்சென்றே நாடு இந்நிலையில் உள்ளது. முஸ்லிம்களை அச்சுறுத்தும் திட்டமொன்று உள்ளது. அரசாங்கம் இதற்கெதிராக கடுமையான நடவடிக்கையெடுக்க வேண்டும். பொலிஸ் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்லை. 1983இலும் பாதுகாப்பு படையினர் சிங்களவர்களின் பக்கம் சார்ந்தனர். 30 வருட யுத்தத்தில் முடிவடைந்தது. அதேபோன்று தர்கா நகர் சம்பவத்திலும் சில இராணுவத்தினர் சிங்களவர்கள் பக்கம் சார்ந்தனர்.
அரசியல்வாதிகளின் உள்ளங்களில் இருக்கும் இன, மத வேறுபாடு நீடிக்கின்றது. தேசத்தைக் கட்டியெழுப்ப இதுவே தடையாக அமைகின்றது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!