ஞானசார தேரரின் கொட்டத்தை அடக்காவிடின் பாரிய விளைவுகள் ஏற்படும்: முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர்

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஞானசார தேரரின் கொட்டத்தை அடக்குவதற்கு இந்த அரசு உடன் நடவடிக்கை எடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

அண்மைய சம்பவங்கள் தொடர்பாக  அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஆலமெல்லாம் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் ஏக வல்ல அல்லாஹ்வை தூசித்தவர்கள் உலகத்தில் அழிவைத்தான் தண்டணையாகப் பெற்றுக் கொண்டார்கள். புனித கஃபாவை அழிக்க வந்த பீல் என்னும் யானைப் படையின் மீது சிறு குருவிகள் சிறு கற்களைப் போட்டு அழித்த வரலாற்றை உலகம் அறியும் என்று அல் – குர்ஆனிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது நாட்டில் இன்று அட்டகாசம் தலைக்கு மேல் சென்றுள்ளது. கலகொட அத்தே ஞான சாரத் தேரர் பொலன்னறுவையில் வல்ல அல்லாஹ்வையும், அல் – குர்ஆனையும் தூசித்து கடும் மோசமாகப் பேசி இருக்கின்றார்.

அதேவேளை பொலன்னறுவையில் இந்த நாட்டின் ஜனாதிபதி முஸ்லிம் பாடசாலை ஒன்றின் 3 மாடிக்கட்டடத்தினைத் திறந்து வைத்திருக்கின்றார். முஸ்லிம் பாடசாலை கட்டுவது நல்லது ஆனால் பாடசாலைகளை உடைப்பதற்கு இவர்கள் இந்த அட்டூழியக்காரர்கள் நாளை முன்வருவார்கள் என்ற அச்சம் முஸ்லிம் மத்தியிலே பரவலாக ஏற்பட்டுள்ளது.

ஞானசார தேரருடைய கொட்டத்தை அடக்குவதற்கு இந்த அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் சமுதாயத்தின் சார்பாக வற்புறுத்தி கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.

இதேநேரத்தில் தோப்பூரில் பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுடைய காணிகளில் உள்ள கொட்டகைகளை காவி உடை அணிந்தவர்களும், கடும் போக்காளர்களும் சென்று உடைத்து அவர்களை அப்புறப்படுத்தக் கூடிய மிகவும் தீவிரமான கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

அன்று புலிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தை உள்ளடங்கிய இடம்தான் தோப்பூர். இதனைத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நோன்பு காலம் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பதாக மாவில்ஆறு போராட்டத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தது மாத்திரமல்ல, புலிகளால்  துவம்சம் செய்யப்பட்ட பாதைகள், வீடுகள், மின்சாரம்,பாடசாகைள், மருத்துவமனைகள், போன்றவற்றை புனரமைத்தார்.

இந்த உண்மைகளை இன்று வாழும் சமுதாயம் அறிய வேண்டும். இப்பொழுது நடைபெறும் விடயங்களைப் பார்க்கும் போது இஸ்லாத்துக்கு விரோதமான முஸ்லிம் விரோத குரல் எங்கே இருக்கின்றது? முஸ்லிம் விரோதமானவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? இந்த அரசாங்கத்திலேதான் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்பது நடைபெறும் விடயங்களில் இருந்து தெரியவருகின்றது.

ஆகவே இப்படியான பயங்கரமான ஒரு நிலையில் பேசிப் பேசி காலத்தை கடத்துவதில் எவ்விதமான பயனும் ஏற்படப்பேதில்லை.

முஸ்லிம்களுக்கு இவ்விதமாக துன்பங்கள் நடந்தும் அவர்கள் பொறுமையாக இருப்பதையிட்டு நன்றி பாராட்ட வேண்டும். உலமாக்கள், ஆலிம்களுடைய சொற்களுக்குச் செவி சாய்த்து அவர்கள் பொறுமை காக்கின்றார்கள். ஆனால் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

இப்பொழுது உள்ள ஜனாதிபதிக்கு அன்றும் வக்காளத்து வாங்கி, முஸ்லிம்களுடைய வாக்குகளைப் பெற்றுத் தந்து, இன்றும் அவரோடு இரவோடு இரவாக பிரயாணம் செய்ததாகக் கூறுகின்ற, அவருக்காக வேண்டி வக்காளத்து வாங்குகின்ற முஸ்லிம்கள் இன்னும் இணைந்திருந்தால் அவர்கள் உடனடியாக அவர்களை இனங்காட்டிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் வந்துள்ளது என்பதையும் நாம் எந்த நாளும் வேண்டுகோள் விடுப்பது போன்று முஸ்லிம் அமைச்சர்களும் அரசாங்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து இப்படியான அட்டகாசங்கள், முஸ்லிம் விரோத சக்திகளை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதியிடம் உடன் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் தாமதம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு இந்த அரசாங்கமும் அரசங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும்தான் வகை சொல்லவேண்டும் என்று நாம் ஞாபகமூட்ட விரும்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!