கை வெற்றிலை கோழி மற்றும் குதிரை என்ற நான்கு சின்னங்களில் போட்டியிடுகின்றோம் – ஜனாதிபதி

(ஆதில் அலி சப்ரி)

 

கேள்வி: உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தயார் நிலை எவ்வாறுள்ளது?

பதில்: நாம் இம்முறை கை வெற்றிலை கோழி மற்றும் குதிரை என்ற நான்கு சின்னங்களில் போட்டியிடுகின்றோம். 442 உள்ளுராட்சி மன்றங்களில் 336க்கு போட்டியிடுகின்றோம். நாட்டினுள் 40 வருடங்களிற்கு பிறகு தேர்தலொன்றின் போது அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாத்திரமே புதிய தேர்தல் முறையை கொண்டுவர நேரடியாக முயற்சித்து. அதிகமானோர் விருப்பு வாக்கு முறைக்கு செல்லவே முயற்சித்தனர். நாடு இன்று அமைதியான தேர்தலொன்றை எதிர்கொண்டிருப்பது அதனாலேயாகும். மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக ஊரிலிருந்து தெரிவுசெய்யப்படுகின்றனர். இது கிராமத்துக்கான தேர்தலாக இருக்கும் போது ஜீ.எல் பீரிஸ் குழுவினர் இதனை அரசாங்கத்துக்கெதிரான தேர்தலாக காட்டி அரசியலில் ஈடுபடுகின்றனர். நான் ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக செயற்படும்போது அவர்கள் ஒரு குழுவாக இணைந்து என்னைத் தாக்குகின்றனர்.

கேள்வி: உங்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டுள்ளதாக கூறும் ஊழல் பெருச்சாளிகள் இன்னும் செயற்படுகின்றனரா?

பதில்: ஆம். தெளிவாக. அதன் விளைவே பாராளுமன்றத்தில் ஆணைக்குழு அறிக்கைகள் இரண்டையும் விவாதிக்காது பிற்போட முயன்றமை. பெப்ரவரி மாதம் 22ஆம் திகதியே விவாதிக்க இருந்தனர். நானே 10ஆம் திகதிக்கு முன்னர் விவாதிக்க கோரினேன். எனது கோரிக்கை மக்கள் கருத்தாக மாறியது. எனவே 10ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்திற்கு திகதி குறிக்க நேர்ந்தது. ஊழல் விவாதம் எவ்வளவு துரம் சாத்தியமாகுமென்பது எனக்குத் தெரியாது. ஒரே நாளில் சில மணி நேரம் அறிக்கைகளை பூரணமாக கலந்துரையாடுவதென்பது சாத்தியமில்லை. தேர்தல் பிரசாரங்கள் முடிவடைவதால் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் தம் பிரதேசங்களிலேயே இருப்பர். விவாதத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் இல்லை. இது ஆரம்பத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய வேலை. 10, 15 நிமிடங்களில் விவாதித்து முடிக்கவேண்டியதொன்றல்ல இவை.

 

கேள்வி: பிணைமுறி விவாதம் சாத்தியமடைந்தாலும் இல்லாவிட்டாலும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா?

பதில்: அறிக்கை என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டு மூன்று நாட்களில் நான் விசேட அறிவிப்பொன்றை செய்தேன். அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பாக மூன்று தடவைககள் சட்டமா அதிபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மத்திய வங்கி ஆளுநர் உட்பட குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதானிகளை கலந்துரையாடியுள்ளேன். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இலஞ்ச ஊழல் சட்டமூலம் திருத்தியமைக்கப்படவேண்டிய அவசியமுள்ளது. அதற்கான வேலைகள் சட்டத்துறையினரின் ஆலோசனைகளுடன் ஆணைக்குழுவின் அறிக்கைகள் வெளிவர முன்னரே ஆரம்பிக்கப்பட்டது. அவை அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்பட்டது. அடுத்து பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்படும். குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

 

கேள்வி: ராஜபக்ஷ குடும்பத்திற்கெதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் கிடப்பில் இருக்கின்றன. அவற்றுக்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்?

பதில்: அது தொடர்பான முழுப் பொறுப்பும் துறைசார் அமைச்சர்களையே சாரும். சட்டம் ஒழுங்கு பொலிஸார் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட மா அதிபர் திணைக்களம் போன்றவற்றுக்கு பொறுப்பான அமைச்சர்களே இதனைப் பொறுப்பேற்க வேண்டும். நான் இதற்கு முன்னரும் அதனைக் குறிப்பிட்டுள்ளேன். இப்போது நடைபெறும் ஊழல் தொடர்பான விடயங்களும் அவ்வாறா? என்று யாராவது கேட்க முடியும். அது அவ்வாறல்ல. ஏனெனின் நான் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளேன். அது எனது பொறுப்பாகும். ஊழல் எதிர்ப்பு செயலகம் அலரி மாளிகையே. அவர்களே அதற்கு பொறுப்பு கூறவேண்டும்.

நாம் இணக்கப்பாட்டு அரசாங்கமொன்றில் பணியாற்றும்போது துறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. நாம் இரு கட்சிகளும் அமைச்சுக்களின் துறைகளை பகிர்ந்துகொண்டே பணியாற்றுகின்றோம். ஐக்கிய தேசிய கட்சியின் துறைகளில் நாமும் எம் துறைகளில் அவர்களும் தலையிடுவதில்லை என்பதே இணக்கம். ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது என்பது உண்மை. ஆனால் இணக்கப்பாட்டு அரசாங்கத்தில் உடன்படிக்கைகளின் அடிப்படையில் பொறுப்புகள் பிரிக்கப்பட்டே இயங்குகின்றன. அதனால் நல்ல விடயங்களை போன்றே தவறொன்று நடைபெற்றாலும் அவர்கள் பொறுப்புக் கூறவேண்டும்.

 

கேள்வி: ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு ஐக்கிய தேசிய கட்சி பொறுப்புக் கூறவேண்டும் என்று கூறுகின்றீர்களா?

பதில்: ஆம். தெளிவாக  இவ்விடயத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்புக் கூறவேண்டும்.

 

கேள்வி: பிணைமுறி அறிக்கையில் பக்கங்கள் குறைவாக உள்ளதா? என்ற சந்தேகம் மக்களிடையே தொடர்கின்றது. இதன் உண்மைத் தன்மை என்ன?  

பதில்: இதற்காகவே நான் கடந்த திங்களன்று கட்சித் தலைவர்களை அழைத்திருந்தேன். சட்ட மா அதிபரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வருகை தந்தனர். அங்கும் இவ்விடயம் மேலெழுந்தது. சட்ட மா அதிபர் முன்னிலையில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது. உண்மையாகவே பக்கங்களில் எவ்வித குறைவும் இல்லை. அது அங்கு தெளிவுபடுத்தப்பட்டது. இந்த அறிக்கைகளில் தொடர்ந்தும் இரகசியம் பேணப்படவேண்டிய விடயங்களும் உள்ளன. அவை வெளியிடப்பட்டால் வழக்குகளுக்கு பிரச்சினையாகலாம்.  குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புள்ளது. அதனால் விசாரணைகளின் தகவல்கள் குற்றவாளிகளுக்கு, சந்தேக நபர்களுக்கு கிடைக்காதிருப்பதே நல்லது. இங்கேயும் வெளியிடப்படக் கூடாத விடயங்கள் இருக்கின்றன. அவை இரண்டு கலஞ்சியசாலைகளில் சீல் வைக்கப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆணைக்குழுவின் அறிக்கைகள் மேற்படி தகவல்களை அடிப்படையாக கொண்டதாகும். இங்கே பக்கங்கள் குறைந்ததல்ல. அதனை கட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

 

கேள்வி: நீங்கள் இலஞ்சம் மற்றும் ஊழல்களை ஒழிப்பதாக கூறிக்கொண்டே ஆட்சிக்கு வந்தீர்கள். எனினும் இப்போது உங்களுடன் ஊழலில் ஈடுபட்டவர்களும் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது. இதுகுறித்து உங்களது நடவடிக்கை என்ன?

பதில்: ஊழலில் ஈடுபட்டவர்கள் என்னுடனோ! என் மேடைகளிலோ! அல்ல. எனது வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு இல்லை. தண்டிக்கப்படவே வேண்டும். அவற்றில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஊழல் தொடர்பாக விசாரணைகளுக்கு எனது தடைகள் இல்லை. இதற்கு நான்கு, ஐந்து மாதங்களுக்கு  முன்னர் வீதி விபத்தொன்று தொடர்பாக எனது சகோதரன் ஒருவரை சிறையில் இட்டேன். வேண்டுமெனின் வேறு சாரதி ஒருவரை நியமிக்க, தீர்ப்பை மாற்ற இருந்தது. எனினும் நான் அவ்வாறு செய்யவில்லை.

வேறு எந்த ஜனாதிபதியும் காட்டாத முன்மாதிரியை நான் காட்டியுள்ளேன். ஊழல் ஒழிப்பு விடயத்தில் செயற்படுபவர்களை நான் பலப்படுத்துவேன். அதுவே எனது கொள்கை.

 

கேள்வி: நீங்கள் முன்மாதிரியாக செயற்பட்டதாக கூறுகின்றீர்கள். எனினும் உங்களுடன் இருப்பவர்களிடமோ! அமைச்சரவையிலோ! அவ்வாறான முன்மாதிரிகளைக் காண முடியாதுள்ளதே! ஏன்?

பதில்: அதுவே இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரிய சாபம். கட்சி பேதமின்றி ஊழலற்றவர்கள் ஒன்றிணைய வேண்டும். அது ஐக்கிய தேசிய கட்சியோ, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியோ என்பதல்ல. நாட்டை கட்டியெழுப்ப ஊழலற்ற, ஊழல் விரோத, நீதியாக செயற்படும் குழுவொன்று முன்வரவேண்டும். அதிகமான நாடுகள் இன்று அவ்வாறே முன்னேறியுள்ளன. அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்து சம்பாதிக்கவே முற்படுகின்றனர். அவர்களே அரசாங்கத்தின் பலம் வாய்ந்தவர்களும். நான் ஊழலுக்கெதிராக மிகவும் கஷ்டத்துடனேயே போராடுகின்றேன். நான் மக்களில் நம்பிக்கை வைத்துள்ளேன்.  நான் இருந்த இடத்தில் இருந்து இங்கே வந்தது அங்கே ஊழல் காரணமாகவே. இங்கும் சிலர் அவ்வாறு நடந்துகொள்வதென்றால் அது பொருத்தமானதல்ல. இது எனது தனிப்பட்ட பிரச்சினையல்ல. நான் பயணிக்கும் கொள்கைக்கான பிரச்சினையாகும். கொள்கை ரீதியாக உடன்படுபவர்களுடனேயே ஆட்சியமைக்க வேண்டும். 10ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் பாலும் பாணியும் போன்றாவர் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறல்ல. ஆட்சியமைத்து முதலாம் இரண்டாம் வருடங்களிலேயே ஆட்சியை இல்லாமலாக்கிக்கொள்ள முடியாது. நிலைமைகளை சீர்செய்துகொள்ள நான் சந்தர்ப்பமொன்றை எதிர்பார்த்திருந்தேன். நாம் நாடு பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது. நான் இந்த அரசாங்கத்தை உடைத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் கதைக்கவில்லை. கட்சி பேதமின்றி நாட்டை நேசிக்கும் பிரிவினரொன்று இருக்கவேண்டும். நாட்டிலும், நாட்டை சூழவும் பெரும் வளங்கள் பொதிந்திருந்தாலும் அரசியல்வாதிகளின் ஊழல் காரணமாகவே அபிவிருத்தி செய்ய முடியாதுள்ளது.

 

கேள்வி: பொது எதிரணியை ஊழல் நிறைந்தவர்களாக கூறும்

நீங்கள் அவர்களுடன் இணைந்து  ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தது ஏன்?

பதில்: எனது கொள்கைகளுக்கு இணங்கி பயணிக்க முடியுமென்றால் வரும் படியே நான் அழைப்பு விடுத்தேன். அங்கே இருப்பவர்கள் அனைவரும் இல்லாவிட்டாலும் அதிகமானோர் ஊழல் பெருச்சாளிகளே. அதுவே உண்மை. ஜீ.எல் பீரிஸின் கட்சி உருவாக்கப்பட்டது தேசிய அரசியல் தேவைக்காகவல்ல. ஆட்சியையும் ஊழல் பெருச்சாளிகளையும் பாதுக்காப்பதற்காகவே. அங்கேயும் நல்லவர்கள் இல்லாமல் இல்லை. நான் என்னுடன் 96 பேரைரும் வந்தமரும் படியே அழைத்தேன். நான் பயணிக்கும் கொள்கையில் பயணிக்க முடியுமாக இருந்தால் மட்டுமே. ஊழல் குழுவில் இருந்துகொண்டு நான் பயணிக்கும் கொள்கையில் அவர்களால் பயணிக்க முடியாது.

 

கேள்வி : பெப்ரவரி 10ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. பிரதமர் பதவியிலும் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதா?

பதில் : அவ்வாறல்ல. குறித்த நபரா? அவரின் பதவியா? என்பது இங்கு பிரச்சினையில்லை. சரியான அரசியல் பயணத்திற்கு தூய்மையான அரசியல்வாதிகள் இணைய வேண்டும். என்பதே இங்கு பிரச்சினையாக இருக்கின்றது. இதனால் அது தொடர்பாக நான் 10ஆம் திகதிக்கு பின்னர் சகல தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்துவேன். தவறுகள் செய்யாத , தவறுகளுடன் தொடர்புபடாத பயணத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பாக அரசாங்கத்துடனும் , எதிர்க்கட்சியுடனும் பேச்சுக்களை மேற்கொண்டு மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பேன். நாம் அரசாங்கத்தை அமைக்கும் போது அதன் பொறுப்புகளை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் தற்போது அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடுவில் இருக்கின்றோம். இப்போது தவறு எங்கே இருக்கின்றது. சரியான பயணம் எது என்பதனை புரிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. சரியானதை செய்வதும் , தவாறனதை நிறுத்தவும் அவசியமாகும்.

 

கேள்வி : இந்த மாற்றத்தின் போது அரசாங்கத்தின் பிரதான கதாபாத்திரத்தில் மாற்றம் ஏற்படுமா?

பதில் : அது தொடர்பாக நாளைய நாளில் பார்ப்போம். இன்றைய தினத்திலேயே எல்லாவற்றையும் கூறமுடியாது தானே. நாளைக்கு கூறவும் விடயங்கள் வேண்டுமே!

 

கேள்வி : தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் காலவதியாகியுள்ளது. ஒப்பந்தம் மேலும் நீடிக்கப்படுமா? இத்துடன் முடிவடையுமா?

பதில் : நாங்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தம் எதுவும் கிடையாதே. ஆவணங்களை விடவும் மனசாட்சியே முக்கியமானது. அதற்கே எதுவும் புரியும். சரியான வேலைத்திட்டம் சிந்தனையிலிருந்து வர வேண்டும். அதற்கேற்றவாறு நாங்கள் நடந்துகொள்ள வேண்டும். என்ன பிரச்சினையாக இருந்தாலும் நான் ஜனாதிபதியென்ற வகையில் நாட்டை நடத்தி செல்வதற்காக அரசாங்கம் ஒன்று அவசியம்தானே. அந்த அரசாங்கம் எனக்கு பொறுத்தமான அரசாங்கமாக இருக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு பொறுத்தமானதாக இருக்க வேண்டும்.

 

கேள்வி : உங்களது 96 பேரும் இணைந்தால் அரசாங்கத்தை அமைக்க தயார் என கூறுகின்றீர்கள். ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 ஆசனங்கள் இருக்கின்றன. இவ்வாறிருக்கையில் 96 பேருடன் அரசமைப்பது சாத்தியமா?

பதில் : அப்படியென்றால் 106 பேரை கொண்டும் அரசாங்கத்தை அமைக்க முடியாது தானே. அப்படி செய்ய முடியாத காரணத்தினால்தான் இரு கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை அமைத்துள்ளது. இணக்கப்பாட்டு அரசாங்கம் ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் கடந்த பொதுத் தேர்தல் பெறுபேறுகளுக்கமைய  எந்த கட்சிக்கும் அரசாங்கத்தை அமைப்பதற்காக போதுமான ஆசனங்கள் இல்லாத காரணத்தினால் ஜனாதிபதியினால் அரசாங்கத்தை அமைக்க வேண்டி வந்திருக்கும். இதனால் தூய்மையான ஊழல் அற்றவர்களை இணைத்துக்கொண்டு புதிய வேலைத்திட்டங்களுக்கு செல்ல வேண்டும்.

 

கேள்வி : ஊழல் மோசடிகளுக்கு எதிராக உங்களின் பதவிக்காலத்திற்குள் நடவடிக்கைகளை எடுத்து முடித்துவிட முடியுமென கருதுகின்றீர்களா?

பதில் : என்னை பலப்படுத்தினால் நான் செய்ய வேண்டியதை செய்வேன். இதற்காக இந்த தேர்தலில் என்னை பலப்படுத்த வேண்டும். இதில் என்னை பலவீனப்படுத்தினால் ஊழல் மோசடிகள் தலைதூக்கும். என்னை பலப்படுத்தினால் எதிர்வரும் காலங்களில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

 

கேள்வி : நீங்கள் தொடர்ந்தும் அரசியலில் இருக்கப்போவதாக கூறியுள்ளீர்கள். இது என்ன அர்த்தத்தில் கூறப்பட்டது?

பதில் : இது பதவி தொடர்பான விடயமல்ல. எனது கொள்கைப்படியான ஒன்றையே கூறினேன். பதவிகளில் ஒருவரின் அரசியல் மட்டுப்படுவதில்லையே. பதவிக்கு முன்னரும் அரசியலில் இருக்கின்றோம்தானே. அதேபோன்று பதவிகளின் பின்னரும் இருக்கலாம். அமெரிக்கா வின் முன்னாள் ஜனாதிபதிகள் அவ்வாறு இருக்கின்றார்கள்தானே. நான் எனது கொள்கைப்படி அரசியலில் இருப்பேன்.

 

கேள்வி : அடிக்கடி உங்களை பலப்படுத்த கூறுகின்றீர்கள். நீங்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடவதா? இல்லையா? என்பது பற்றி கூறினால் மக்களுக்கு உங்களை பலப்படுத்த இலகுவாக இருக்குமே!

பதில் : ஹா… ஹா… ஹா… (பலமாக சிரித்துவிட்டு) இப்போது நாட்டுக்கு எவ்வளவோ விடயங்கள் பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு பின்னால் உள்ள விடயம் அது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!