ஹஜ் குழுவின் தீர்மானம்: நெருக்கடியில் முகவர் நிலையங்கள் !!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

– கியாஸ் ஏ. புஹாரி

“முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பில் ஹஜ் யாத்திரிகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஹஜ் யாத்திரைக்கு அழைத்துச் செல்வதற்கு அரச ஹஜ்குழு புதிய யோசனைகளை முன்வைத்துள்ளது.
இந்தப் பிரேரணை தொடர்பாக ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துச் செல்லும் முகவர் நிலையங்கள் மாற்றமான கருத்துக்களைக் கொண்டுள்ளன. இது தொர்பாக அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் எம். றிஸ்மி றியாழ் ‘நவமணி’க்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:”

கேள்வி: 2020 ஹஜ் ஏற்பாடு குறித்து பிரதமருடன் நடாத்திய பேச்சுவார்த்தை தொடர்பான உங்களுடைய கருத்து என்ன?

பதில்: பிரதமருடன் இடம்பெற்ற கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. கடந்த வருடம் டிசம்பர் 23 ஆம் திகதி சவூதியில் ஹஜ் சம்பந்தமான மாநாடு இடம்பெற்றது. அதில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட குழுவினர் 3500 ஹஜ் கோட்டாக்களுக்கும் கையொப்பமிட்டுள்ளனர்.

அந்த மாநாடு நிறைவுற்ற கையோடு குறித்த குழுவினர் நாடு திரும்பியதும் எந்த விதமான கலந்தாலோசனைகளையோ அல்லது கூட்டத்தினையோ ஹஜ் முகவர் நிறுவனங்களுடன் நடத்தவில்லை. சுமார் 45 நாட்களுக்கு பின்னரே ஹஜ் முகவர் நிறுவனங்களுடன் இது சம்மபந்தமான கூட்டம் நடாத்தப்பட்டது. அதில் கட்டணக் குறைப்பு விடயங்கள் மற்றும் அவற்றுக்கான அறிவித்தல்கள் வழங்கப்பட்டன.

ஆனால் அவை காலதாமதமாகி வழங்கப்பட்டதுடன், அசாத்தியமான முறையிலமைந்திருந்தது. இதனால் இத் திட்டம் ஹஜ் நிறுவனங்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன.

இந்த விடயம் சம்பந்தமாக எமது அமைப்பினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டனர். அச் சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தது. பிரதமர் மனிதநேயமிக்க ஒருவர். அவர் பொதுவாக பல விடயங்களை சுட்டிக் காட்டினார்.

அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட தொகைக்கு மேலதிகமாக பணம் செலுத்தி சொகுசுகளை அதிகம் அனுபவிக்க எத்தனிக்கும் மக்களிடம் மட்டுப்படுத்தப்பட்ட தொகைக்கு மேலதிகமாக அறவீடு செய்யவும் அனுமதியளித்தார்.

அப்படி அனுமதி வழங்கப்பட்ட போதிலும் வெறுமனே சில அதிகாரிகளின் கருத்துக்களால் அந் நடைமுறை தடைப்பட்டுள்ளது. இது மக்களுக்கு தெளிவில்லாத விடயமாக உள்ளது. சரியான திட்டமிடல் இல்லாமல் கருத்துக்கள் முன்மொழியப்பட்டதால் மக்கள் மனதில் ஹஜ் நிறுவனங்கள் பற்றிய தப்பெண்ணம் உருவாக அவை காரணமாகியுள்ளன.

இருந்தபோதிலும் கடந்த பெப். 14 அன்று பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பு சுமுகமான நிலைமையில் முடிவடைந்ததுடன், அச் சந்திப்பு ஹஜ் குழுவினருக்கு திருப்தியாகவும், வெற்றிகரமானதாகவுமே காணப்பட்டது.

கேள்வி: இவ்வாறு பிரதமருடன் திருப்தியாக நடைபெற்று முடிந்த பேச்சுவார்த்தையின் பின்னர் மீண்டும் ஹஜ் பயணக் கட்டணம் சம்பந்தமாக விமர்சனம் எழ காரணம் என்ன?

பதில்: கிட்டத்தட்ட 40 வருடங்களாக இச் சேவையினை வழங்கும் முகவர் நிலையங்களும் உள்ளன. அதே போல் ஒவ்வொரு காலகட்டங்களில் பல நிறுவனங்கள் உருவாகியும் உள்ளன. இப்படி நீண்ட காலங்களாக தொடராக செய்து வந்த இந்த திட்டத்தை திடீரென நிறுத்த முடியாது. இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு நிறைவடையும் விடயமல்ல இது. ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக அமைக்கப்படும் திட்டமல்ல இது!

இந் நடைமுறை கண்டிக்கத்தக்கது. குறைந்தது ஒரு வருடத்துக்கு முன்னராவது கட்டணக் குறைப்பு சம்பந்தமாக அறிவிக்கப்பட்டிருந்தால் ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தியிருக்கலாம். அவ்வாறன்றி திடீரென எடுத்தெறிந்து சட்டத்தை வகுத்தால் அவற்றிக்கு யார் பொறுப்பு. பயணிகளை எந்த வகையில் எங்களால் திருப்திப்படுத்த முடியும்.
இதனை நாங்கள் பலமுறை எடுத்துக்கூறியும் ஹஜ் குழு அதனை விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை.

அதற்காக பணிப்பாளர் மற்றும் ஹஜ் குழுவினருக்கு நாங்கள் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், இவ் வருடம் இருக்கின்ற அதே திட்டத்திலேயே இருக்க அடுத்த வருடம் இக் கட்டணக் குறைப்பு சம்பந்தமாக உன்னிப்பாக இருங்கள். சாதாரணமாக ஒவ்வொரு ஹஜ் முகவர் நிறுவனங்களும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இப் பணியினை மேற்கொள்கின்றன. அவ்வாறு செய்கின்ற சந்தர்ப்பத்தில் 100 சதவீதம் திருப்திகரமாக சேவை வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன.

இப்படி சிக்கல்கள் நிலவுகின்ற நிலைமையில் திடீரென கட்டணம் குறைக்கப்பட்டால் என்னவாகும். பௌதீக ரீதியாக சிந்தனை செய்து பாருங்கள். சாதாரணமாக இனிவரும் சில நாட்களில் மக்கா, மதீனாவிலுள்ள ஹோட்டல்கள் மிகவும் கெடுபிடியாகிவிடும். அச் சந்தர்ப்பத்தை கருத்தில்கொண்டு முன்கூட்டியே பல நிறுவனங்கள் பதிவுகள், ஏற்பாடுகளை மேற்கொள்வது வழமை. அவ்வாறிருக்கையில் அரசாங்கம் திடீரென்று இப்படி செய்தால் நிலைமை எவ்வாறு அமையும்.

கேள்வி: ஹஜ் நிறுவனங்கள் சம்பந்தமாக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட பல வாய்ப்புக்கள் உள்ளன. அவற்றை நீங்கள் நோக்கும் கண்ணோட்டம் என்ன?

பதில்: பொதுவாக இவ்வாறனதொரு செயற்பாட்டை நாங்கள் வெறுக்கவில்லை. அனுபவமற்ற சிலரது அதிகாரப் பிரயோகங்கள் இவ்வாறனதொரு கருத்தை வளர்த்துவிட்டுள்ளது. தவறிழைக்கும் ஒரு சில ஹஜ் முகவர் நிலையங்களை தண்டிக்க நினைத்து அனைத்து நிறுவனங்களையும் பொறிக்குள் சிக்க வைப்பது முற்றிலும் தவறாகும்.

பொதுவாக நமது சமூகத்தவர்களில் பலர் எந்தவொரு அலுவலகம் செல்வதானாலும் அதற்கான கடப்பாட்டை கடைப்பிடிப்பார்கள். ஆனால், முஸ்லிம் கலாசார திணைக்களம் செல்லும் போது அந்த ஒழுக்கங்களை கடைப்பிடிப்பதில்லை.

ஏதோ விரும்பியபடி அலுவலகத்தினுள் நுழைந்து வேலைகளை முடித்துக் கொள்ள எத்தனிப்பர். இது நல்ல விடயமல்ல மற்ற இடங்களில் காட்டும் பண்பாடுகளை நமது சமயம்சார் அலுவலகத்திலும் காட்ட வேண்டும்.

இப்படியொரு நிலைமை இருக்கின்ற போது பொதுமக்கள் ஹஜ் முகவர்கள் மீது நல்லது கூறுவது குறைவாகத்தான் உள்ளது. ஹஜ் குழுவினால் வெளியிடப்பட்ட இவ்வாறான கருத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமாகும்.

குறிப்பாக பல ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் கூட திரிவுபடுத்தப்பட்டதாக அமைகின்றன. இந்தப் பின்னணியில் ஹஜ் முகவர் நிறுவனங்களை பொது மக்கள் திருடர்களாகப் பார்க்கின்றனர். இது முற்றிலும் பிழையான கண்ணோட்டம்.
முதலில் அந் நிலைமை மாற வேண்டும். ஹஜ் முகவர் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜாஜிகளை கூட்டிச்சென்று வழிகாட்டி வந்து சேரும் வரை படுகின்ற அவலங்களை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு திட்டம் வகுத்த இதே கட்டணத்தில் குறைந்தது 100 பேரையாவது கூட்டிச் சென்று திருப்தியாக ஹஜ் கடமைகளை நிறைவேற்றிவிட்டு கூட்டிவர முடியுமா? இதனை நாங்கள் சவாலாக விடுக்கின்றோம். சிறு அளவேனும் சாத்தியப்படாத விடயத்தை மக்கள் மனங்களில் விதைத்து இன்று முகவர் நிறுவனங்களை நெருக்கடிக்குள் மாட்டிவிட்டுள்ளனர்.

கேள்வி: அப்படியாயின் இந் நிலைமை குறித்து ஹஜ் முகவர்களின் நிலைப்பாடு என்ன? இதனை நீங்கள் எவ்வாறு கருதுகின்றீர்கள்!

பதில்: நிச்சயமாக அது தற்போதைய நிலைமையில் சாத்தியமற்றது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் எமக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தலின் பிரகாரம், கடத்த 17ஆம் திகதி திணைக்களத்தினால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் Package A – 750,000.00, Package B – 650,000.00, Package C – 575,000.00 என வரையறுத்து கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் (1) ஹரத்திலிருந்து மக்கா வரையில் 300 மீட்டர் தூர இடைவெளி, (2) ஹரத்திலிருந்து மதீனா வரையில் 300 மீட்டர் தூர இடைவெளி, (3) 3 – 4 நட்சத்திர ஹோட்டல்கள் வழங்கப்படல் வேண்டும், (4) இடம் அஸீஸியா அல்ல. என்ற 4 வரையறைகளும் கூறப்பட்டுள்ளன.

அவ்வாறு கூறப்பட்ட வரையறைகளில் எவை, எந்த ஹோட்டல், எவ்வளவு தூரம் என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. மேலும், இதுவரையில் அஸீஸியாவில் இருந்த வசதிகள் அனைத்தையும் ‘குதை’ எனும் இடத்தில் அமைத்துக்கொள்ள தீர்மானம் எடுத்துள்ளனர்.
‘குதை’ எனும் இடம் மக்கா மதீனாவிலிருந்து நெடுந்தூரமாகும்.

எனவே, அவ்வாறு ஏற்பாடு செய்யும் போது பயணிகளின் இடைஞ்சல்கள் அதிகரிக்கும். இதனால் பல சிக்கல்களை பயணிகளுக்கும், முகவர் நிறுவனங்களுக்குமிடையில் தோன்றக்கூடும்.

கேள்வி: முகவர்கள் எத்தனை வருட காலமாக இந்த சேவையினை செய்து வருகின்றனர்? தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என்ன?

பதில்: சுமார் 40 வருடங்களாக ஹஜ் முகவர்கள் இந்தப் பணியினை செய்து வருகின்றனர். இது நன்மையான காரியமும் கூட. தற்போது ஆகக் குறைந்த கட்டணமாக 575,000 ரூபா நிர்ணயிக்கப்பட்டு ஹாஜிகள் விரும்பினால் அவரவர் சொகுசுகளுக்கு ஏற்றால் கட்டணத்தை கூட்டி அறிவிடும் படி பணிக்கப்பட்டுள்ளனர்.

இதனை பொது மக்கள் சரியாக புரியாத நிலைமையில் முகவர் நிறுவனங்களை அவர்கள் குறைகூறுகின்றனர். கடந்த அரசாங்கத்தில் கூட புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு IATA பதிவினை ஒவ்வொரு நிறுவனமும் செய்து அந்த சான்றிதழையும் வைத்துக் கொண்டுள்ளார்கள்.

இவ்வாறு திடீரென புதிய மாற்றம் வருகின்ற சந்தர்ப்பத்தில் அவை பல விதங்களிலும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன. சுமார் 92 இற்கு மேற்பட்ட பதியப்பட்ட ஹஜ் முகவர் நிறுவனங்கள் உள்ளன. Hajj Tour Operators Association of Sri Lanka, All Ceylon Hajj Tour Operators Association ஆகிய இரண்டு அமைப்புக்கள் உள்ளன. இப்போது இந்த அமைப்புக்கள் இரண்டும் இணைந்து அரசாங்கத்துடன் சுமுகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

கேள்வி: இது தொடர்பாக நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

பதில்: வழமையாக 3 குழுக்களாக ஹஜ் செல்லும் குழுக்கள் உள்ளன. அவை: துல்கஃதா 15 இல் செல்லும் குழு, துல்கஃதா 25 இல் செல்லும் குழு, துல்ஹஜ் 4,5,6 இல் செல்லும் குழு. இந்த மூன்று குழுக்களும் பயணிக்கும் காலத்தினைப் பொறுத்து அதன் செலவுகள், வசதிகள் வித்தியாசப்படும். அதற்கான கட்டண தொகைளிலும் பாரிய வித்தியாசங்கள் உள்ளன.

இந் நிலைமையில் இவ்வாறான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு, சாத்தியப்படாத அளவுகளில் விலை நிர்ணயம் செய்யப்பட்டால் முகவர் நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுவது என்பதே எங்களது கேள்வி!

மேலும், பல ஆண்டுகளாக அரச அங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகின்ற முகவர் நிறுவனங்களிடம் இவ்வாறு புதிய திட்டம் நடைமுறைக்கு வருவதாயின் முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். இது திடீரென ஏற்படுத்தப்பட்ட பூகம்பம் ஆகும்.

குறைந்த கட்டணம் 575,000 என்பது இப்போது பிரச்சினையில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாயின் அது எவ்வகையில் சாத்தியம். குறைந்தது அடுத்த வருடமாவது சாத்தியப்படுத்த முடியும்.

எனவே, வீண் அறிக்கைகளால் மக்களையும் குழப்பி, முகவர் நிறுவனங்கள் மீதும் சேறு பூச யாரும் எத்தனிக்க வேண்டாம் என்பதே எமது வேண்டுகோள்! இவ்வாறான திட்டத்தினை நாங்கள் வெறுக்கவில்லை. அதற்கான செயற்பாட்டுக் காலத்தை அடுத்த வருடத்தில் இருந்து நடைமுறைப்படுத்துவதே
சிறந்ததாகும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives