இஸ்லாத்திற்கு நெருக்கமான கட்சி மக்கள் விடுதலை முன்னணியே

இஸ்லாத்திற்கு நெருக்கமான கட்சி

மக்கள் விடுதலை முன்னணியே

 – பாராளுமன்ற உறுப்பினர், கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெட்டி

—————————————————————————————————-

(நேர்காணல் – ஆதில் அலி சப்ரி)

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் மத அடிப்படையில் மிக நெருக்கமான அரசியல் கட்சி மக்கள் விடுதலை முன்னணியேயாகும். நாம் திருடுவதில்லை, ஊழலில் ஈடுபடுவதில்லை, பொய் கூறுவதில்லை, மக்களை ஏமாற்றுவதில்லை. எமது கட்சி கூட்டங்களில் புகைத்தலையோ, மதுவையோ காணமுடியாது. இதுவே இஸ்லாத்தின் போதனையுமாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர், கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெட்டி தெரிவித்தார்.

விசேட பாராளுமன்ற அமர்வைத் தொடர்ந்து நவமணி பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்,

கோப் குழுவின் தலைவர்  சுனில் ஹந்துநெட்டியுடனான முழுமையான நேர்காணல் இங்கே தருகின்றோம்.

 

கேள்வி:  உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வழமைக்கு மாறாக மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முஸ்லிம் பகுதிகளிலும் போட்டியிடுவதை காணக்கூடியதாக உள்ளது. புதிதாக எந்த  பிரதேசங்களில் போட்டியிடுகின்றது?

பதில்: முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் முழுமையாகவும் யாழ்ப்பாணத்தில் 6 சபைகளுக்கும், மட்டக்களப்பில் 6 சபைகளுக்கும் போட்டியிடுகின்றோம். இவ்வாறான தேர்தலொன்றுக்கு மக்கள் விடுதலை முன்னணி இப்பிரதேசங்களில் போட்டியிடுவது இதுவே முதல் தடவையாகும். யுத்தத்தின் பின்னரே நாம் இப்பிரதேசங்களில் எமது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தோம். அப்பிரதேசங்களில் எம்மை ஆதரித்தவர்களே போட்டியிடுகின்றனர்.

 கேள்வி: இப்பிரதேசங்களில் மக்கள் விடுதலை முன்னணிக்கான ஆதரவு மற்றும் வரவேற்பு எவ்வாறுள்ளது?

பதில்: உண்மையில், அப்பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள், மக்கள் விடுதலை முன்னணியை சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகவே விளங்கிவைத்திருந்தனர். அது தவறானதாகும். முஸ்லிம்களின் பெயரிலும், தமிழர்களின் பெயரிலும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் கட்சிகள் உள்ளன. அவர்கள் உண்மையிலேயே தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்கள் அரசாங்கத்தை அல்லது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

தற்போதைய பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால், அவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாது ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். வரவு- செலவுத் திட்டத்தை எதிர்க்கவில்லை, பொருட்களின் விலை அதிகரிப்பை எதிர்க்கவில்லை, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கவில்லை, வட பகுதி மீனவர்களின் பிரச்சினைகள் பேசவில்லை. எனவே அவர்கள் தமிழ் மக்களையன்றி, ரணிலையே பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

அதேபோன்றுதான், முஸ்லிம் காங்கிரஸ், றிஷாத் பதியுதீன், அமீர் அலி, அலி சாஹிர் மௌலானா, அதாவுல்லாஹ் என அனைவருமே அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளையே எதிர்பார்க்கின்றனர். அவர்கள் முஸ்லிம் மக்களை விற்பவர்கள். மக்கள் விடுதலை முன்னணி அவ்வாறில்லை. முஸ்லிம், தமிழ், மலையக மக்கள் எமக்கு வாக்களிக்காத போதும் நாம் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினோம். நாம் அவர்களின் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தோம். ஜே.வி.பி சிங்கள மக்களின் கட்சியல்ல. நாம் அனைத்து மக்களினதும் கட்சியாவோம். நாம் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் என்பதை அந்த மக்களும் விளங்கிவைத்துள்ளனர். கோப் குழு பிணைமுறி மோசடியை வெளிப்படுத்தியது. பிணைமுறி மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளது அனைவருமே. அங்கே சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற பேதமில்லை. மோசடியில் இருந்து காப்பாற்றப்பட்டதில் உள்ள இலாபமும் அனைவருக்குமே. இன்று நான் ஏறாவூருக்கோ, காத்தான்குடிக்கோ சென்றாலும் நீங்கள் தானே கோப் குழுவின் தலைவர் என மக்கள் கேட்கின்றனர். அதுவே எமக்கான ஆதரவு. எமக்கு கிடைக்கும் வாக்குகளோ, பதவிகளோ முக்கியமல்ல. மக்களின் எம்மீதான நம்பிக்கையே எமக்கு தேவை.

தமிழ் முஸ்லிம் கட்சிகள் மீதான மக்கள் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளன. அவர்கள் இனவாதிகள் என்பதால். அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இனவாதிகளாக இருந்தாலும், பொது மக்கள் என்றுமே இனவாதிகளல்ல. அது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளன. இனவாதத்தை ஆதரிக்காதவர்கள் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிக்கின்றனர்.

  கேள்வி: மக்கள் விடுதலை முன்னணியில் அதிகமான முஸ்லிம் பெண்கள் போட்டியிடுவதைக் காண்கின்றோம். அதுகுறித்துது…

பதில்: பெண் பிரதிநிதிகள் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததும் மக்கள் விடுதலை முன்னணியே. அதற்காக பெரும் போராட்டமொன்றே செய்தோம். பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்தை கொண்டுவந்தபோது பொது எதிரணியினர் எதிர்த்தனர். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முதலாவது முஸ்லிம் பெண் பாராளுமன்ற உறுப்பினரை கொண்டுவந்த பெருமையும் எம்மையே சாரும். இலங்கையின் பெண்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்றனர், இலங்கையின் பெண்கள் கடலுக்கு செல்வதை தவிர ஏனைய அனைத்து துறைகளிலும் நாட்டுக்கு பங்களிப்பு செய்கின்றனர். பொருளாதாரத்திந்கு மேற்கொள்ளும் பங்களிப்பின் வீதத்திற்கு, சனத்தொகையின் வீதத்திற்கு அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும். அது பிரதேச சபை, மாகாண சபை தாண்டி பாராளுமன்றம் வரை உறுதிசெய்யப்பட வேண்டும். இன்றை பெண்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அன்றாட விடயங்களில் தொடர்புபடுகின்றனர்.

எமது கட்சியில் கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் பெண்களும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். பல் அங்கத்தவர் தொகுதிகளால் சிறு கட்சிகளுக்கு அநீதியென அதிகமானோர் கூறினர். அது அவ்வாறில்லையென இப்போது உறுதியாகியுள்ளது.

கேள்வி:  முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறுபட்ட வெறுப்புப்  பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு பார்க்கின்றது?

பதில்: மக்கள் விடுதலை முன்னணி முஸ்லிம்களின் வியாபார, மத, உயிர் வாழும் உரிமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியொன்றல்ல. இஸ்லாத்தின் அடிப்படையில் ஜே.வி.பிக்கு உதவுவது தவறென்று முஸ்லிம் தலைவர்கள் கூறுகின்றனர். ஜே.வி.பி கொமியுனிஸ்ட் என்பதால். அது தவறானதாகும். அது மக்களுக்கான கட்சியாகும். கட்சியின் அடிப்படைகளில், கொள்கைகளில் கொமியுனிஸம் இருக்கலாம். ஜே.வி.பி 1971, 1988 மற்றும் 1989களில் ஆயுத போராட்டமென்றை மேற்கொண்டது. யாரும் தமிழ் அல்லது முஸ்லிம் என்ற காரணத்தினால் துண்புறுத்தப்படவில்லை. அநியாயக்காரர்களே தண்டிக்கப்பட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியால் யாரும் இனவாத அல்லது மத அடிப்படையில் பாதிக்கப்படவில்லை. அதன் காரணமாகவே கட்சியின் தலைவர்களாக நிஸ்மி, தங்கதுறை போன்றவர்கள் இருந்தனர்.

தெற்கில் சிங்கள இனவாத குழுக்கள் உள்ளனர். பொதுபல சேனா போன்றோர். அவர்களுக்கு நாமும் ஒரு வசனத்தாலாவது உதவியிருந்தால் நிலைமை வித்தியாசமாக இருந்திருக்கும். நாம் அவ்வாறு செய்திருப்பின் சிங்கள வாக்குகள் அதிகரித்திருக்கும். நாம் வசனமொன்றின் மூலமாவது இனவாதிகளை ஆதரித்ததில்லை. அவர்கள் சிங்கலே என்கின்றபோது, நாம் மனிதர்கள்- இலங்கையர்கள் என்றோம். வாக்குகளைப் பெற இனவாதத்தை பாவிக்காத ஒரே கட்சி நாமே. மஹிந்த, ரணில் என எவருக்குமே அதனைக் கூறும் தகுதியில்லை. இன்று ரணில் முஸ்லிம் காங்கிரஸின் மரத்தை வெட்டி, யானையை மேலே ஏற்றியுள்ளார். முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் கட்சியொன்றை இல்லாது செய்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சம்பவங்களின் போது குரல்கொடுத்தது நாமே. நோன்பு காலத்தில் பேரீட்சம் பழத்துக்கான வரி அதிகரிப்பை அமைச்சரவை முஸ்லிம் உறுப்பினர்கள் பேசாதபோதே நாம் பேசினோம். நாம் முஸ்லிம்களின் வாக்குபலத்தை எதிர்பார்த்து இவைகளை செய்யவில்லை. நாம் இனவாதிகளல்ல என்பதே அனைத்துக்கும் காரணம். இனவாதிகளுக்கு இலங்கையில் இடமில்லை. இனவாதிகளை ஆதரிக்க வேண்டாம்.

 

கேள்வி: முஸ்லிம்கள் ஓர் தனித்துவமான சமூகம். முஸ்லிம்களின் தனித்துவங்கள்  பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றீரா?

பதில்: முஸ்லிம்களின் தனித்துவங்களை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றோம். மதிக்கின்றோம். அதற்கு நாம் விரலடிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கும் கலாசாரமொன்றுள்ளது. அனைத்து மத, கலாசார உரிமைகளுக்கும் விரலடிக்காதிருப்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணி மத உரிமைகளை மீறாது.

முஸ்லிம்களுக்கு மத ரீதியாக அதிகமாக நெருக்கமான கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியே. நாம் திருடுவதில்லை, ஊழலில் ஈடுபடுவதில்லை, பொய் கூறுவதில்லை, மக்களை ஏமாற்றுவதில்லை. இஸ்லாத்திலும் இவையே கூறப்பட்டுள்ளன. ஏனையோர் மதத்தை காட்டிக்கொண்டு அனைத்துவிதமான தீய காரியங்களிலும் ஈடுபடுகின்றனர். நாம் எந்நேரமும் வணங்கிக்கொண்டிராவிட்டாலும், மத கொள்கைகளை மதிக்கின்றோம். மக்கள் விடுதலை முன்னணியின் கட்சிக் கூட்டங்களில் புகைத்தலையோ, மதுசாரத்தையோ கண்டுகொள்ள முடியாது. மத போதனைகள் அரசியல் கட்சிகளிலும் தலைவர்களிடமும் இருக்க வேண்டும்.

கேள்வி: டொனால்ட் ட்ரம்ப்பின் ஜெரூஸலம் பிரகடனத்தை எவ்வாறு காண்கின்றீர்?பலஸ்தீன் தொடர்பான  உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: நாம் எப்போதுமே பலஸ்தீனை ஆதரித்த கட்சியொன்று. எமது பிமல் ரத்நாயக்க சர்வதேச மாநாடுகளிலும் பலஸ்தீனை ஆதரித்து உரையாற்றியுள்ளார். இலங்கையிலும் பலஸ்தீன தினத்தை கொண்டாடுகின்றோம். எந்தவோர் நாட்டிலும் மக்கள் உரிமைகளை மீற பிறருக்கு உரிமையில்லை. பலஸ்தீன மக்களின் சுதந்திரத்துக்கு தடையாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட போலி இராச்சியமே இஸ்ரேல். ஜெரூஸலம் குறித்த தீர்மானமெடுக்க அமெரிக்காவுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இலங்கையில் பல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பலஸ்தீனுக்கு ஆதரவு வழங்கினோம். உலக ஜனநாயக இளைஞர் சம்மேளனத்திலும் உரையாற்றினோம். அமெரிக்காவின் அட்டூழியத்திற்கு எதிராக கையொப்ப வேட்டையொன்றையும் ஆரம்பித்துள்ளோம். இது முஸ்லிம்களின் பிரச்சினையல்ல. மனிதாபிமான பிரச்சினை.

 கேள்வி: மக்கள் விடுதலை முன்னணி முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்போது சிங்கள் ஆதரவு குறைவடைதா?

பதில்: நாம் வாக்குகளை இலக்குவைத்து அரசியல் செய்யவில்லை. உண்மைக்காக போராடி வாக்குகளை இழந்தாலும் பரவாயில்லை. சிங்கள வாய்களால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவது பிரச்சினையென்றால், உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் எமது உண்மையான முஸ்லிம் தலைவர்களை தெரிவுசெய்யவும். அவர்கள் உங்கள் பிரச்சினைகளை பேசுவார்கள். உங்கள் முஸ்லிம் தலைவர்களை நியமித்துக்கொள்ள நாம்

வேட்பாளர்களை இறக்கியுள்ளோம். பிரதிநிதிகளை தெரிவுசெய்துகொள்ளவும். உங்களது வீட்டில் 5 வாக்குகள் இருப்பின் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலசுக, முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒன்றொன்றாக கொடுத்துவிட்டு இரண்டை எமக்கு தாருங்கள். வருடமொன்றில் நாம் யாரென புரிந்துகொள்வர்.

கேள்வி: பிணைமுறி மோசடி குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் விடுபட்டுவிட்டதாக பிரசாரங்களை காண்கின்றோம். உண்மையிலேயே பிரதமருக்கும் மோசடிக்கும் தொடர்பில்லையா?

பதில்: மலத்தில் விரலை விட்டதும் வாசனைமிக்கதாக இருக்குமா? துர்நாற்றமாக இருக்குமா? மலம் துர்நாற்றமென தெரிந்துகொண்டு யாரும் விரலைவிட மாட்டார்களே. தன் கையால் தவறொன்று நிகழ்ந்திருப்பின் தவறை புரிந்து, ஏற்றுக்கொண்டு நீதியாக நடப்பதே தலைவரொன்றின் பண்பு. பிரதமர் ரணில் ஆரம்பத்திலிருந்தே மலத்தால் குளித்தார். அவர் குறித்து, ஏனையோரின் உடம்பிலும் பூசினார். அதனாலேயே சிலர் இராஜினாமா செய்தனர். பிணைமுறி மோசடியை நாட்டுக்கு முதன்முதலாக தெளிவுபடுத்தியது நான். அதனைத் தொடர்ந்து எமது தலைவர் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். பிரதமர் மூவரடங்கிய குழுவொன்றை நியமித்தார். அதற்கு சிரிகொத ஆதரவாளர்களை நியமித்தார். அதனைத் தொடர்ந்தே கோப் குழு விசாரணைகளை ஆரம்பித்தது. இரண்டாவது அறிக்கை என்னால் தயாரிக்கப்பட்டது. அதற்கும் தடைகள் வந்தன. இப்போதே இவையனைத்தும் அலோசியஸின் பணத்தால் இடம்பெற்ற ஆட்டமென தெரியவருகின்றது.

இவையனைத்துமே மலத்தை பூசிக்கொண்ட வேலையே. மத்திய வங்கி ஆளுநருக்கு குற்றச்சாட்டு வந்ததும் அவரை ஒதுக்கிவிட்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தால் இப்பிரச்சினைகள் எதுவும் இருந்திருக்காது. துர்நாற்றமேற்பட்டிருக்காது. மனதில் திருட்டுத்தனம் இருந்ததால்தானே திருட்டை மறைக்க முயற்சித்தனர். பூனைகள் மலம் கழித்தவுடன் மூடிவிட முயற்சிக்கும். பூனை கல்லொன்றில் மலம் கழித்துவிட்டு மூடி மறைக்க முயற்சிசெய்யும்போது உடம்பில் பூசிக்கொள்ளும். இதுபோன்ற வேலையொன்றே பிரதமருக்கும் அவரது குழுவினருக்கும் இடம்பெற்றுள்ளன.

பிணைமுறியென்பது அரசாங்கத்திற்கு நிகழ்ந்த நட்டம் மாத்திரமல்ல. நாட்டு மக்களையும் பாதித்துள்ளது. 8 சதவீதமாக இருந்த வட்டிவீதம் 16ஆக அதிகரித்தது. பொருளாதாரம் பாதித்தது. வங்கியில் கடன் பெற்றவர்களை பாதித்தது. விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அலோசியஸிடம் நிதியை திருப்பிப் பெற்று, சொத்து செல்வங்களை அரசுடைமையாக்குவதில் மாத்திரம் பாதிப்புகள் நின்றுவிடப்போவதில்லை. மக்களுக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு யார் பொறுப்பு? 5 மாதங்களில் 1100 பில்லியன் எனின் இது தொடர்ந்திருந்தால் நாட்டின் நிலைமை என்ன? இதனை நேரகாலத்துடன் கண்டறிய முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

கேள்வி: ஒரு தடவையே பதவி வகிப்பதாக கூறிக்கொண்டுவந்த மைத்திரி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கும் தயாராகின்றாரா?

பதில்: 18ஆவது யாப்பு சீர்திருத்தத்தை மேற்கொண்டு, அதிக காலம் இருக்க முற்பட்ட மஹிந்தவுக்க நடந்தது என்ன? அதிக காலம் நீடிக்க தடுமாறுபவர்கள் இருக்க வேண்டிய காலத்திற்கு முன்னதாகவே விடைபெற வேண்டிவரும். மைத்திரிக்கும் கூற இருப்பது அவ்வளவுதான். அதிக காலம் இருக்க முயற்சித்தவர்களின் வரலாற்றை நோக்கவும். அதிக தூரம் சென்று பார்வையிட தேவையில்லை. அப்பம் சாப்பிட்ட தோழரின் வரலாற்றை பார்த்தால் போதும்.

கேள்வி: பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அடிதடிகளை எவ்வாறு காண்கின்றீர்?

பதில்: கவலைக்குரிய விடயம். இதுவா? நாட்டின் பாராளுமன்றமென்று எண்ணத்தோன்றியது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாது, உடல் பலத்தை காட்டுவது அசிங்கமானது. உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு தாம் சண்டியர்கள் என்று காட்டவே இந்த சண்டை. இவர்களை பாராளுமன்றம் அனுப்பிய மக்கள், வாக்களித்த கைகளை துண்டித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறானவர்கள் உள்ளூராட்சிமன்றங்களுக்கும் பொருத்தமற்றவர்கள். நாம் அறிவுசார் கலந்துரையாடல்களையே வரவேற்கின்றோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!