யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை இந்நாட்டு முஸ்லிம்கள் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

Share on facebook
Share on twitter
Share on whatsapp

முஸ்லிம்களுடன் அதிக அக்கறையுள்ள தலைவராக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  மாத்தளை மாநகர எல்லையில் வரலாறு காணாத அபிவிருத்திகளைச் செய்துள்ளதுடன்,மாத்தளை  மாவட்டத்தையும் பாரிய அபிவிருத்தி செய்ததாக மாத்தளை மாநகர முன்னாள் முதல்வர் ஹில்மி கரீம் தெரிவித்தார்.

 அவர் வழங்கிய நேர்காணலில்  தெரிவித்ததாவது:

கேள்வி :அரபு நாடுகள்,முஸ்லிம் நாடுகளுடன் மஹிந்த ராஜபக்‌ஷ நல்லுறவை வைத்துள்ளார்.எனினும் நம்நாட்டு முஸ்லிம்கள் அவர் மீது அதிருப்தியில்  உள்ளதாகப் பலரும் விமர்சிக்கின்றனரே?

பதில் :முதலில் இக்கருத்தை நான் முற்றாக நிராகரிக்கிறேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் மீது இரக்கமுடையவர்.அவரது ஆட்சியில் முஸ்லிம் சமூகத்தின் பல தேவைகள் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம் நாடுகளுடன் மட்டுமல்ல ஆசியாவின் முஸ்லிம் நாடுகளுடனும் மஹிந்த நெருங்கிய தொடர்பை பேணி வருகிறார். பலஸ்தீனில் மஹிந்த ராஜபக்ஸவின் பெயரில் ஒரு வீதி கூட இருக்கின்றது.

ஆனால், இந்த நல்லுறவை சகித்துக் கொள்ள முடியாத எதிரணியினர் இட்டுக்கட்டப்பட்ட வதந்திகள், விமர்சனங்களால் முஸ்லிம்களிடமிருந்து மஹிந்தவை தூரப்படுத்த முயற்சிக்கின்றனர்.இப்போலித்தனங்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். உண்மை முகம் மக்களுக்கு உரிமையுடன் வெளிப்படும். இதன்போது மஹிந்தவின் உண்மைத் தன்மையை முஸ்லிம்கள் புரிந்து கொள்வர்.

கேள்வி? மஹிந்த ராஜபக்ஷ மீதான நம்பிக்கையை முஸ்லிம்கள் இழப்பதற்கு அளுத்கமை சம்பவங்களா காரணம்?

பதில்: அளுத்கமை சம்பவம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் நடைபெற்றாலும் அதற்குப் பின்னாலிருந்த பலர், இன்றைய ஆட்சியிலே உள்ளனர்.இவர்களின்

கபட நாடகங்களாலே அழுத்கமை அசம்பாவிதம் இடம்பெற்றது.இந்த அசம்பாவிதங்களை மஹிந்த ராஜபக்ஷ உடனடியாகக் கட்டுப்படுத்தினார்.

இந்த நல்லாட்சியில் 300 இற்கும் மேற்பட்ட சம்பவங்கள் பல முஸ்லிம் பகுதிகளிலும் இடம்பெற்றன.இவற்றைக் கட்டுப்படுத்த பிரதமர் ரணில்விக்கிரமசிங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த யதார்த்த்தை உணர மக்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகின்றது.மேலும் சட்டம், ஒழுங்கும் அமைச்சு கூட பிரதமர் ரணிலிடமே இருந்தது. அவ்வாறிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை வேடிக்கை பார்த்த இந்த அரசாங்கம் இன்று முஸ்லிம்களிடம் அப்பாவி வேசம் போடுகிறது. இதை முஸ்லிம்கள் உணந்து கொள்ளத் தவறுவதால், இன்னும் இன்னும் அடக்குமுறைகளை எதிர்நோக்க நேரிடுகிறது.

அவற்றை உணர்ந்த தலைவர்கள் கூட எமது சமூகத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்காது முழுமனே ஒரு பக்கம் தலை சாய்த்து நிற்கின்றனர். சுய இலாபங்களை மட்டும் சிந்திக்கும் இவ்வாறான தலைவர்கள் சமூகத்தின் இலாபத்தை கருத்தில் கொள்ளாமலிருப்பது கவலையளிக்கிறது.

கேள்வி? அப்படியானால் மஹிந்த ராஜபக்ஷ சிறந்தவரென்பதா உங்களது நிலைப்பாடு?

பதில்:ஆம், நிச்சயமாக அவர் மும்மதங்களையும் சமமாக மதிப்பவர். இதில் எனக்குப் பூரண நம்பிக்கை உள்ளது. அவரின் ஆட்சியில்தான் வானொலி சேவையில் ஐவேளை அதானுக்கு அணுமதி வழங்கப்பட்டது. முஸ்லிம் கிராமங்களில் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு, தொழில்வாய்ப்புக்களும் வழங்கப்பட்டன.

அதை விடவும் 30 வருட கால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஒரு தலைவரை இந் நாட்டு முஸ்லிம்கள் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. இவற்றையெல்லாம் மறக்கடிக்க முஸ்லிம்கள் மத்தியில் பல போலி ஏஜெண்டுகள் நுழைந்துள்ளனர்.

மஹிந்தவை இனவாதியாகவும்,மதவாதியாகவும்

காட்ட எத்தனிக்கும் இந்த போலி ஏஜெண்டுகள் முஸ்லிம்களுக்கு விரோதமானவர்களே.

2015ஆம் ஆண்டு முஸ்லிம்களை ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகத் திசைதிருப்பியது போன்று இம்முறை திருப்ப முடியாதென்பதை இந்த முஸ்லிம் விரோத ஏஜெண்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சாக்கடை அரசியலுக்குத் துணை போகாத சரித்திர அரசியல் தலைவராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியடைவார் என்பது உறுதியானது.
கேள்வி? கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானால் முஸ்லிம்களுக்கு நன்மை கிட்டுமா?

பதில்:ஏன் கிட்டாது அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு பல்வேறு விடங்களைச் செய்தவர் கோட்டாபய. அவற்றை உதாரணமாக முன்னிலைப் படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன முஸ்லிம் அமைப்பின் ஊடாக நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம். அப்போது முஸ்லிம்களின் நண்பன் கோட்டாபய ராஜபக்ஷ என்பது தெரிய வரும்.நான் இங்கு ஒன்றை ஞாபகப் படுத்த வேண்டும்.கோட்டாபய ராஜபக்ஷ மாத்தளைப் பகுதியில் இராணுவ அதிகாரியாக இருந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்துள்ளார். அக்காலத்தில் என்னுடனிருந்த நண்பர்களுக்கும் இவை தெரியும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்திப்பவரே எங்களது ஜனாதிபதி வேட்பாளர்.

கேள்வி? நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு ஏதும் நன்மை கிடைத்துள்ளதாக் கருதுகின்றீர்களா?

பதில்: நல்லாட்சி என்பது பெயரளவில் மட்டும்தான். இந்த ஆட்சியில்தான் முஸ்லிம்களின் இருப்பே கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. ஒரு பயங்கர சூழலில் எங்களது சமூகம் இன்றுள்ளது.நல்லாட்சிக்கு வாக்களித்த அநேக முஸ்லிம்கள் இம்முறை எங்களது வேட்பாளர் கோட்டாபயவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். மக்கள் இந்த முறை தெளிவாக உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives