தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று மாலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, ஊரடங்கு உத்தரவு என்பது 30ம் தேதிவரை நீட்டிக்கப்படும். ஏற்கனவே ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் வலியுறுத்தியிருந்தேன். மற்ற மாநில முதல்வர்களும் கூட கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதன் அடிப்படையிலும், பொது சுகாதார வல்லுநர் குழுவின் பரிந்துரை அடிப்படையிலும், நோய்த்தொற்று அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டும், நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஏப்ரல் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும்.
தமிழகத்தில் வரும் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபட்டு உள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 30ந் தேதி வரை அமலில் இருக்கும்.ஊரடங்கு நீட்டிப்பால் ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்.
கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும்.
காலை 6மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பேக்கரிகள் செயல்படலாம், பார்சல் முறையில் மட்டும் விற்பனை நடைபெற வேண்டும்.பிறமாநில தொழிலாளர்களுக்கு 15கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதால் தற்போது வாபஸ் பெறப்படவில்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!